சென்னை உட்பட தமிழகம் முழுவதுமே கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில் - நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
அண்மையில் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டார். திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர்கள் போட்டுக்கொண்டதற்கான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
அதில் "தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருங்கள்" என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் இதுவும் கடந்துபோகும் என்ற ஹேஷ்டேகும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது..