நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜகவைச் சேர்ந்த திருச்சி சூர்யாவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபகாலமாக பாஜகவில் அடுத்தடுத்து பல சர்ச்சைகள் வெடித்து வருகின்றது. சமீபத்தில் பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருக்கும் திருச்சி சூர்யா, அக்கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக திட்டிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் நேரடியாகவே விமர்சித்து தமிழக பாஜக தலைமையிடம் அவருக்கு பதவி வழங்கியது குறித்து கேள்வியெழுப்பினார்.
இந்த விவகாரத்தில் கடும் அழுத்தத்திற்கு உள்ளான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக காயத்ரி ரகுராமை 6 மாத காலத்திற்கு கட்சியை விட்டு நீக்கினார். திருச்சி சூர்யாவை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்தார். மேலும் சூர்யா - டெய்சி இருவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் தான் நீக்கப்பட்டது வேதனை அளிப்பதாக காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார்.
இப்படியான சூழலில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி நேற்றைய தினம் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் தி.மு.க.வுக்கு தாங்கள் தான் எதிர்கட்சி என்று சொல்லும் பாஜக, ஸ்டாலின் உறுமும்போது மட்டும் பயந்து பதுங்கும் பூனைகளால் நிறைந்திருக்கிறது. சினிமா கலாச்சாரம் தமிழக பாஜகவை அழித்துவிட்டது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
இதனை குறிப்பிட்டு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, அண்ணாமலையை குறிப்பிட்டு "உங்கள் கனவு, ஆசை எல்லாம் சினிமாவை சுத்தியே இருக்குதாமே. நான் சொல்ல சுப்பிரமணிய சுவாமி சொல்லுது!! நடிகை வாசுகிகிட்ட 1000 ரூபா கொடுத்து திமுகவை திட்ட சொன்னப்பவே தெரியும் எல்லாம் பில்டப்பு தானு.. பாஜகவே ஒரு நாடக கம்பெனிதானு என தெரிவித்திருந்தார்.
இந்த பதிவுக்கு திருச்சி சூர்யா பதிலளித்திருந்தார். அவர் வெளியிட்ட ட்வீட்டில், அப்படியே வச்சுக்கோ , ஆனா உங்க மாதிரி நடிகைகளையே வெச்சிக்கிற கம்பெனி கிடையாது பா . புரியவில்லை என்றால் போய் உங்க சின்னவர் கிட்ட கேளு என சரமாரியாக தாக்கி பேசியிருந்தார்.
இந்நிலையில் திருச்சி சூர்யாவின் பதிவுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கொந்தளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திருச்சி சூர்யா பதிவை சுட்டிக்காட்டி இப்படி இருந்தால் மாற்றத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? நடிகைகளும் மனிதர்கள்தான். ஒரு தொழிலை குறிப்பிட்டு தாக்குவது ஏற்கத்தக்கது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் மற்றும் ஒரு நபர் அல்லது எதிர்க்கட்சியை நேரடியாக தாக்குங்கள். அவர்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்.. தயவு செய்து யாரையும் தாக்கும் வகையில் பேசும் போது, அதில் பெண்களை குறிப்பிடவோ அல்லது ஈடுபடுத்தவோ வேண்டாம் என தெரிவித்துள்ளார்.