ஒருவர் தெரிந்தே தனது மரணத்தை எதிர்கொள்வது மிகவும் கொடுமையான ஒரு விஷயம். ஆனால், அந்த கொடுமையை அனுபவித்துவிட்டுதான் மரணித்திருக்கிறார் கராத்தே பயிற்சியாளரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி. மரணப் படுக்கையிலிருந்த அவர், கடைசி வரை தனது சமூக வலைதள பக்கத்தில் அப்டேட்டுகளை கொடுத்தும், வீடியோ வெளியிட்டும், மக்களின் வேதனையை அதிகரித்தே சென்றுள்ளார். ஆனால், அவர் விருப்பம் தெரிவித்தும், கடைசி வரை விஜய் அவரை சென்று பார்க்காதது, பலருக்குள்ளும் பல கேள்விகளை எழச் செய்துள்ளது.
கராத்தேவில் சிறந்து விளங்கிய ஷிஹான் ஹுசைனி
சிறந்த கராத்தே வீரராக விளங்கிய ஷிஹான் ஹுசைனி, 3 முறை உலக கராத்தே போட்டியில் வென்றுள்ளார். வில்வித்தை வீரருமான அவர், 2016-ம் ஆண்டு தமிழக வில்வித்தை சங்கம் என்ற அமைப்பை தொடங்கி, பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். ஏராளமான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த அவர், கராத்தே மற்றும் வில்விதிதையில் பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளார். தனது கடைசி காலம் வரையிலுமே மாணவர்களுக்கு அவர் தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார்.
நடிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் ஹுசைனி. அதன் மூலம், தொழில் ரீதியாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், கே. பாலச்சந்தர், பாரதிராஜா, எஸ்.பி.பி, ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு வழங்கியிருப்பதாக அவரது சமூக வலைதள பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார்.
பத்ரி படத்தில் விஜய்யின் குருவாக வந்த ஹுசைனி
2001-ம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படத்தில், விஜய்யின் உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்த ஷிஹான் ஹுசைனி, விஜய்யை ஒரு வீரனாக உருவாக்கும் பயண சோல்ஜர் பாடலின் உருவாக்கத்திற்கும் பங்களித்து, அந்த பாடல் காட்சியிலும் தோன்றினார். என்னதான் படத்திற்காக என்றாலும், பயிற்சி இல்லாமல் அத்தகைய வித்தைகளை செய்ய முடியாது. அதனால், திரைக்கு வெளியிலும் நிச்சயம் ஹுசைனி விஜய்க்கு பயிற்சி அளித்திருப்பார். அந்த பாடல், இளைஞர்களுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
மரணப்படுக்கையில் இருந்த ஹுசைனி.. கண்டுகொள்ளாத விஜய்
தான் மரணப்படுக்கையில் இருந்தபோதும், அவரை தொடர்வோர்களுக்கு கடைசி தருணம் வரை அவரே தனது சமூக வலைதள பக்கம் மூலம் அப்டேட்டுகளை வழங்கி வந்துள்ளார் ஹுசைனி. அதில் பல வேண்டுகோள்களும் இருந்துள்ளன. மருத்துவமனைகளில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு வர்ணனையாகவே அவர் வழங்கி வந்துள்ளார். அப்படி வெளியிட்ட ஒரு வீடியோவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதியிடம், வில்வித்தைக்காக ஒரு பயிற்சி மைதானம் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படி வழங்கப்படும் பட்சத்தில், தன்னுடைய வில்வித்தை மாணவர்கள் நிச்சயம் உலக அளவில் இந்தியாவிற்காக தங்கம் வெல்வார்கள் என உறுதி அளித்துள்ளார்.
இதேபோல், தன்னிடம் வந்து கராத்தே கற்றுக்கொண்ட பவன் கல்யாண், தனது பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் வீட்டிற்கு ஒரு வில்வித்தை வீரரை விஜய் உருவாக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது ஒருபுறமிருக்க, தனது மருத்துவ செலவிற்காக, தனது பிரமாண்டமான வீட்டை விற்பதாகக் கூட அவர் பதிவிட்டுள்ளார். வீட்டில் உள்ள வசதிகளை விவரித்து புகைப்படங்களுடன், வீடு விற்பனைக்கு என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இத்தனை நடந்த பிறகும் கூட, நடிகரும், தவெக தலைவருமான விஜய், ஒரு மரியாதைக்கு கூட ஹுசைனியை மருத்துவமனைக்கு சென்று சந்திக்கவில்லை. அதே சமயம் எந்த ஒரு கருத்தும் கூட தெரிவிக்கவில்லை. டிராகன் படக்குழுவினரை சந்தித்து பாராட்ட மனமிருந்த விஜய்க்கு, மரணத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த தனக்கு நன்கு பரிட்சயமான ஒருவர் குறித்து நினைக்கக் கூட நேரமில்லையா என ஹுசைனியின் மரணத்தால் வேதனையடைந்தவர்கள் கேட்கின்றனர்.
தற்போது ஹுசைனி மறைந்தே விட்டார். இந்த நிலையில், விஜய்யின் பதில் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. யாரேனும் அவரிடம் கேட்டால்தான் தெரியும்.