அரசியலுக்கு வந்த பின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகத்தில் சினிமாவின் பாணியை பார்க்க முடியவில்லை என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். 

Continues below advertisement


திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சரும், தமிழ்நாடு அரசின் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 27ஆம் தேதி தனது 49 வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


சிறப்பு விருந்தினராக வடிவேலு


இப்படியான நிலையில் திமுக இளைஞரணி சார்பில் பல்வேறு பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி., ஆ.ராசா அமைச்சர் அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு பங்கேற்று உரையாற்றினார். 


மக்களுக்காக இறங்கி பணியாற்றும் உதயநிதி


அப்போது உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வருகைக்குப் பின்னர் அவரது முகத்தில் சினிமா பாணியை பார்க்க முடியவில்லை. அவர் மக்களுக்காக இறங்கி பணிகளை செய்து வந்தபின் அவரின் உருவம்,பேச்சு ஆகிய எதுவும் சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது என்று கூறினார். 


அப்போது மழை பெய்ததால் அனைவரும் திமுக கட்சி கொடி நிறத்திலான குடையை பிடித்திருந்தனர். அதனை குறிப்பிட்ட வடிவேலு எங்கு பார்த்தாலும் நமது கட்சி கொடி தான் தெரிகிறது. இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை என்பது மாற்றுக் கருத்து இல்லை. 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்,, 200க்கு மேல் வருவது நமது லட்சியம்.. என தெரிவித்தார். 


சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்


மேலும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் பெருமையாக உள்ளது. அவர் எப்போதும் சுறுசுறுப்பான எறும்பு போல் செயல்படுவார். படங்களில் நடிக்கும் போது அவருக்கு இயக்குநர் என்ன வேலை கொடுப்பாரோ அதை பொறுமையாக உள்வாங்கி நடந்து கொள்வார். அந்த வகையில் தற்போது திமுக தலைமை அவருக்கு என்ன பொறுப்பு வழங்கி இருக்கிறதோ அதனை சரியாக உள்வாங்கி மக்களை தயார் செய்து அங்கு தகுதிக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றி கொள்ளக் கூடியவர். 



கலைஞருடைய பேரன் என்றால் சும்மாவா சொல்லுங்கள். நான் சினிமாவில் பார்த்த உதயநிதிக்கும் அரசியலில் பார்க்கும் உதயநிதிக்கும் வித்யாசம் இருக்கிறது. இனிமேல் அவரிடம் சினிமா முகமே பார்க்க முடியாது. உழைப்பு மட்டும்தான் அவரின் பணியாக உள்ளது. 


அதனால் மீண்டும் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் வருவார். அவனவன் போடும் சட்டமெல்லாம் நமக்கு சாதகமாகத்தான் இருக்கும் என மத்திய அரசை அப்போது வடிவேலு மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். மற்ற மாநிலங்களை எல்லாம் உடைக்கும் நிலையில் எங்கு இங்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறார்கள் முடியவில்லை. இது மிகப்பெரிய கோட்டை என வடிவேலு கூறினார்.  


அப்போது நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற பாடலின் சில வரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அர்ப்பணித்தார். பின்னர் மக்களோடு மக்களாக இணைந்து வேலை பார்ப்பதற்கு தான் இன்றைக்கு ஆள்கள் கிடையாது. ஆனால் ஆ.ராசா, அன்பில் மகேஷ், சேகர்பாபு போன்றவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றக் கூடியவர்கள். பயம் என்பதே திமுகவிற்கு கிடையாது என வடிவேலு பேசினார்.