13 வயதில் ஒரு செயல் வீரராக செயல்பட்டு வந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என நடிகர் சத்யராஜ் புகழாரம் சூட்டியுள்ளார்.
திருவள்ளூரில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், “இதற்கு பெயர் தான் திமுக மேடை. வசனங்கள் பேசுவதற்கு வேறு மேடை உள்ளது. அது மேட்டர் இல்லாதவர்கள் பேசும் இடம். அங்கு ஈஸியா கைதட்டல்கள் வாங்கி விடலாம். அது எந்த மேடையில் வேண்டுமானாலும் நடக்கும். இதெல்லாம் வெட்டி உதார். இதனை எல்லா நடிகருக்கும் அவங்கவங்க ஸ்டைலில் செய்ய முடியும். கொள்கையை பேசும் மேடை இது தான்.
ஆ.ராசா போன்ற திமுகவினர் பேசுவதைக் கேட்டால் அறிவு வளரும். ஆனால் இப்படி வசனம் பேசுவதைக் கேட்டால் அறிவு வளராது. சும்மா ஜாலியா இருக்கும். அது அந்த காலத்தில் இருந்தே நடந்துக் கொண்டு வருகிறது. தோழர் சேகுவரா என்ற ஒரு படத்திற்கு தணிக்கை துறை மிகப்பெரிய அளவில் பிரச்னை செய்தது. அந்த காலத்தில் உதயசூரியன் பார்வையிலே என்ற வார்த்தை வந்தாலே தணிக்கை துறை கட் பண்ணி விடுவார்கள். அப்படியாக தோழர் சேகுவரா படத்தில் அண்ணாதுரை என்ற பெயர் கொண்ட ஒரு கேரக்டர் இருக்கும். அதை அய்யாதுரை என மாற்றச் சொன்னார்கள்.
மத்திய அரசைப் பற்றி நாம் எதுவும் பேசவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு சர்வாதிகார சூழலில் ஒரு முதல்வராக இல்லாமல் போர்ப்படை தளபதியாக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார். இது காக்கப்பட வேண்டிய ஒரு ஆட்சி. திமுக ஆட்சி இந்தியாவில் முன்மாதிரியாக திகழும் ஆட்சி. அதனால் தான் தீவிர எம்ஜிஆர் ரசிகனான நான் இந்த திமுக மேடையில் நிற்கிறேன்.
எனக்கும், முதலமைச்சருக்கும் கிட்டதட்ட ஒரே வயது. ஆனால் கருணாநிதியோடு தான் அதிகம் பழகினேன். அவரின் வசனத்தில் இரண்டு படங்கள் நடித்தேன். அந்த படத்தின் ஷூட்டிங் கோபாலபுரம் ஏரியாவில் நடந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் அமைதியாக தான் இருப்பார். ஒரு முதலமைச்சரின் மகன் என்ற எண்ணம் அவரிடம் இருக்காது. 13 வயதில் ஒரு செயல் வீரராக சைக்கிளில் திமுக கொடியைக் கட்டிக்கொண்டு சளைக்காமல் சுற்றுவார்.
இந்த வயதிலும் தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் செய்கிறீர்களே உங்களுக்கு சோர்வு ஆகாதா என கேட்டால், அதெல்லாம் இல்லை. என்னுடைய உயிர் மூச்சு திமுக என சொல்லுவார். நம்முடைய குடும்பம் 5 வருடங்களுக்கு முன்பும், இப்போதும் எப்படி இருக்கிறது என்பது தமிழ்நாட்டின் குடிமகன்களின் மனசாட்சிக்கு தெரியும். அவர்கள் நிச்சயமாக உதயசூரியனுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்பது என் ஆணித்தரமான நம்பிக்கையாகும். இந்த தேர்தலில் அந்த கட்சிக்கும், இந்த கட்சிக்கும் போட்டியில்லை. சமூக நீதிக்கும், சனாதனத்திற்கும் தான் போட்டி” என கூறியுள்ளார்.
இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியில் வசனங்கள் பேசுவதற்கு வேறு மேடை உள்ளது என நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டது தவெக தலைவர் விஜயை தான் என பலரும் தெரிவித்துள்ளனர்.
