நடிகர் ரஜினிகாந்த் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிகவாதியுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ரஜினியின் இரண்டு மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோர் உடன் இருந்தனர். சமீபத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், டப்பிங் பணிகளும் முடித்துவிட்டு தற்போது ஓய்வு எடுத்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஜூலை 12ஆம் தேதி வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என்பதால், மக்கள் மன்றத்தை கலைப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.


இதுதொடர்பாக, சென்னை. கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு முன்பு தான் அரசியலில் ஈடுபடலமா? வேண்டாமா? என்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த முடிவு செய்ய உள்ளதாக கூறினார். ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பால் மீண்டும் பரபரப்ப ஏற்பட்டது.




இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பிற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்குக்கும் என்னை வாழ வைத்த  தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்கவேண்டிய கடமை என்னுடையது.


 






நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.  கால சூழலால் நாம் நினைத்து சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் ஏதுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.


கடந்தாண்டு டிசம்பர் 3-ந் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடக்கம், டிசம்பர் 31-ந் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று ரஜினிகாந்த் பதிவிட்டிருந்ததும், அதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தியும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்ததும் குறிப்பிடத்தக்கது.