தமிழ்நாட்டில் வரும் 30-ஆம் தேதி வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச் 31 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதன்படி இன்று முதல் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34.4 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாத்தில் 33.7 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.