தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
01.10.2023 முதல் 05.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வட கடலோர கர்நாடகா மற்றும் அண்டை பகுதிகளில் சூறாவளி சுழற்சியின் காரணமாக, தெற்கு கொங்கன்-கோவா கடற்கரை ஒட்டி கிழக்கு மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்புடைய சூறாவளி சுழற்சி சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிமீ வரை உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மியான்மர் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புயல் சுழற்சியின் தாக்கத்தின் கீழ், வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 7.6 கிமீ வரை உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கம் நோக்கி நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை தொடங்கும். இந்நிலை இந்த இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் இருக்கும் அதிகப்படியான வெயிலின் காரணமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதாவது வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இது வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை நிகழும் இயல்பான வானியல் மாற்றம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.