தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் அதவஹி டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வரும் 17 ஆம் தேதி, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து வரும் 20 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வாரம் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக்ஜாம் புயலால் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியது. பலரது வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து போனது, அதிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் சென்னைக்கு வரும் 17 முதல் 19 ஆம் தேதி வரை மீண்டும் அதிகனமழை இருக்கும் என வெளியான தகவலால் மக்கள் பீதியில் உள்ளனர். ஆனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை எதுவும் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் (தனியார் வானியல் ஆய்வாளர்) பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்:
17.12.2023 வரை, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.