சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர் இளங்கோ கடந்த வாரம் 22-ஆம் தேதி வாதிட்டார். இரு தரப்பினருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பு வாதம் இன்று நடைபெறும் என கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். இன்று செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும் நேரில் ஆஜரானார்.
என்.ஆர். இளங்கோ தரப்பு வாதம்:
- சட்டவிரோத கைது, இயந்திரத்தனமாக நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார்.
- கைதுக்கான காரணங்கள் தொடர்பான ஆவணங்கள் கடந்த 16 ம் தேதியே முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால்14 ம் தேதியே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
- கைதுக்கான காரணங்களை தெரிவித்து தயாரிக்கப்பட்ட மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என்பது குறித்து எந்த பதிவு இல்லை
- கைது தொடர்பான ஆவணங்கள் கொடுக்கப்படாதது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. கைது மொமோவோ, கைது குறித்த தகவலோ கைது செய்த போது தயாரிக்கப்படவில்லை
- பிரிவு 41 ஏ எல்லா வழக்குகளிலும் கைது செய்ய வேண்டியதில்லை. தேவைப்பட்டால் மட்டுமே கைது செய்ய முடியும்.
- போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை
- கஸ்டம்ஸ் சட்டம், ஜிஎஸ்டி சட்டம், என்.டி.பி எஸ் சட்டங்களில் கஸ்ட்டி எடுத்து விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. அமலாக்கத்துறையில் அதுபோல அதிகாரம் வழங்கப்படவில்லை .
அமலாக்கத்துறை தரப்பு வாதம்:
- கைது குறித்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குக்கு தகவல் தெரிவித்ததாக மொபைல் ஸ்கிரீன் ஷாட் இணைக்கப்பட்டுள்ளது.
- ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு தகுதியானதா என முதலில் ஆராயவேண்டும்.
- அவர் கைது சட்டவிரோத காவல் கிடையாது. கைதுக்கு பிறகு எந்த நீதிமன்றமும் ஆட்கொணர்வு வழக்கை எடுத்துகொள்ள முடியாது
- நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை. நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை. அதனால் ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது.
- கைது செய்தவுடன் ஆட்கொணர்வு வழக்கு தொடர முடியாது. சட்டவிரோத கைது என தனியாகத்தான் வழக்கு தொடர முடியும். ஆட்கொணர்வு வழக்கில் ரிமாண்ட் ஆர்டரை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. அவரை எந்த துன்புறுத்தலும் செய்யவில்லை.
- நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால், சட்டவிரோத கைது என கூற முடியாது
- ஜாமீன் வழக்கு தொடர்ந்துதான் அனைத்து கோரிக்கைகளையும் முன்வைக்க முடியும். ரிமாண்ட் ஆர்டரை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. ஆட்கொணர்வு வழக்கை ரத்து செய்யவேண்டும்.
- செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை. அதனால் அவரை ஆட்கொணர்வு வழக்கில் ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது
- ஜூன் 14 அதிகாலை 1:39 கைது; நீதிமன்ற காவலில் வைக்க கோரிய மனு 24 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்யப்பட்டது. கைது குறித்து உரிய தகவல் தெரிவித்தோம். சி.ஆர்.பி.சி 41 ஏ பிரிவு இதில் பொறுந்தாது.
- சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது. கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை.
- எங்களுக்கு ஆஜர்படுத்தி கஸ்டடி கேட்ட அதிகாரம்,உரிமை உள்ளது. அதை ஏற்பதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
- உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
- செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார்
- கைது செய்த 10 மணி நேரத்துக்குள் கைது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது; கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார்
- கைது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும், கைதுக்கான காரணங்களை தெரிவித்த ஆவணத்தை செந்தில் பாலாஜிப்பெற மறுத்ததற்கான ஆதாரங்களும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன
- கைதின் போது செந்தில் பாலாஜிக்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ சட்ட உதவிகளை செய்தார். கைதின்போது இரு சாட்சியங்கள் உடனிருந்தனர். மேலும் விரிவான விசாரணைக்கு பின்பே போலீஸ் கஸ்டடி கொடுக்கப்பட்டது
- ஆதாரங்களை அழித்துவிடுவார்கள் என்பதாலே காவல் கேட்டோம். நீதிமன்ற காவல் இயத்திரமானது அல்ல