அரசியலில் தான் ஆக்ரோஷமாக இருப்பதால், தன் மீது 90 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், ஐபிஎஸ் அதிகாரியாக நேர்மையாக இருந்தபோதிலும், தற்போது இந்த வழக்குகளால் பாஸ்போர்ட் பெறுவது கூட கடினமாக உள்ளதாக ABP Southern Rising Summit நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
என் மீது 90 வழக்குகள்:
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று கூறிய அண்ணாமலை, தான் ஆக்ரோஷமாக இருப்பதால், தன் மீது 90 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், ஐபிஎஸ் அதிகாரியாக நேர்மையாக இருந்தபோதிலும், தற்போது இந்த வழக்குகளால் பாஸ்போர்ட் பெறுவது கூட கடினமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
சில நேரங்களில் வாயை மூட வேண்டும்:
மேலும் பேசிய அவர் கருத்துக்கள், கொள்கைகளில் அதிமுக உடன் வேறுபட்டு இருந்தாலும், தேர்தலுக்காக ஒன்றாக பயணிப்பதாகவும், தன்னுடைய கருத்துக்களில் இருந்து தான் மாறாவிட்டாலும், அரசியலுக்காக வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது என்றும், அது தான் கற்றுக்கொண்ட பாடம் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் இல்ல போர்:
தமிழ்நாட்டில் அமைதியான முறையில் அரசியல் செய்ய முடியாது என்றும், இங்கு நடப்பது போர் என்பதால் அதற்கு ஆக்ரோஷமாகவே செயல்பட வேண்டும் என்றும், அப்படி செயல்பட்டதன் மூலம் தனக்கு நல்ல பெயரே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
ஆளும் திமுக அரசு மும்மொழிக்கொள்கையை எதிர்க்கலாம். ஆனால், நான் 100 சதவிகிதம் ஆதரிக்கிறேன். எனக்கு எனது கொள்கை சரியானதாக தெரிகிறது. நாங்கள் மதிக்கக் கூடிய கூட்டாளிகளாக இருப்போம். முழுமையாக ஒன்றுபடாவிட்டாலும், சில அம்சங்களில் ஒருமித்து செயல்படுகிறோம் என்றார்.
பிரதமர் தான் தமிழ்நாட்டின் மூகம்:
பிரதமர் மோடியின் முகமே தமிழ்நாட்டிலும் பாஜகவின் தேர்தல் முகமாக தொடரும். கட்சி ரீதியான அனைத்து பணிகளையும் பார்க்க வேண்டிய அழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளேன். இதனால் குடும்ப தலைவனாகவும் செயல்பட முடிகிறது.
பல அவமானங்களுக்குப் பிறகு நோட்டா கட்சி என்ற நிலையிலிருந்து மேலே வந்துள்ளோம். முன்பு அதிகபட்சம் 7 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டோம். தற்போது அது 20-க்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது. இதனால் மக்களிடம் நாங்கள் அதிகளவில் சென்றடைந்துள்ளோம். எடுத்த உடனேயே மக்கள் நம்பி வாக்களிப்பதில்லை. நாள்பட்ட உழைப்பே பலனளிக்கும். அதன்படி பல தலைவர்கள் சேர்ந்து பணியாற்றுவதால் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் பாஜகவின் வெற்றி மரமாக மாறலாம்.