காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வரும் நிலையில் அமைச்சர் முத்துசாமி ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “எங்களது கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததை தேர்தல் அறிவித்த முதல் நாளில் இருந்து தெரிந்தது. முதலமைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை மீறி ஆட்சி மீது மக்களிடம் நம்பிக்கை இருந்தது. மக்கள் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் பூர்த்தி செய்வார். நிதிநிலை மோசமாக இருந்தாலும், பல திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்
மகளிருக்கு உரிமை தொகை வழங்கவில்லை என்பது மட்டுமே எதிர்கட்சிகள் வைத்த ஒரே குற்றச்சாட்டு. அது விரைவில் வழங்கப்படும். 10 ஆண்டுகள் தேங்கி கிடந்த அடிப்படை வசதிகளை செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. அப்பணிகள் விரைவில் முடியும்.
ஈரோட்டிற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை தரும். மக்கள் கொடுத்துள்ள இந்த வெற்றி மூலம் மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவோம். தாய்மார்களுக்கு நன்றியோடு பணிகளை செய்வோம்.
எதிர் கட்சிகள் விமர்சனங்கள் வைத்தால் தான் நாங்கள் இன்னும் வேகமாக வேலை செய்வோம். எதிர்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்பதை மக்கள் இன்று பதிலளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.