சிவபெருமானின் பஞ்சபூதங்களில் முதன்மையானதாக கருதப்படுவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செல்வதை சிவ பக்தர்கள் தங்களது தலையாய கடமையாக கருதி வருகின்றனர்.

Continues below advertisement

இந்த சூழலில், சமீபகாலமாக ஆந்திராவில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலை, கர்நாடகாவில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் சமீபகாலமாக அண்ணாமலையாரை தரிசிப்பதில் சிரமங்கள் உண்டாகியுள்ளது.

வெளியூர் - உள்ளூர் பக்தர்கள் மோதல்:

சமீபகாலமாக திருவண்ணாமலைக்கு ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து ஏராளமான தெலுங்கு பேசும் பக்தர்கள் அதிகளவு வருவதால் அவர்களுக்கும் தமிழ் பக்தர்களுக்கும் இடையே சாமி தரிசனம் செய்வதிலும், வரிசையில் நிற்பதிலும் பல்வேறு கருத்து மோதல் ஏற்பட்டு வாக்குவாதங்கள் உண்டாகிறது. சில சமயங்களில் வெளி மாநில பக்தர்கள் இடையேயே மோதல் உண்டாகிறது.

Continues below advertisement

ஆயிரங்கால் மண்டபம்:

திருவண்ணாமலை கோயிலில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டிட கலையின் அடையாளம் இந்த ஆயிரங்கால் மண்டபம். ஆயிரம் தூண்களை கொண்ட இந்த மண்டபம் பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதற்கு முன்பு அனைவரும் சென்று ரசிப்பதற்கு திறந்தே இருக்கும். ஆனால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்த பிறகு கட்டணி தரிசனத்திற்காக ஆயிரங்கால் மண்டபத்தை மறைத்து கம்பிகள் அமைத்து வரிசை அமைக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளே சென்று அதன் அழகை ரசிக்க இயலாத சூழல் தற்போது உள்ளது. 

சிபாரிசுகள்:

அண்ணாமலையாரை தரிசிப்பதற்கு பல மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் சூழலில், சில பக்தர்கள் அங்கே பணியாற்றுபவர்கள் மற்றும் தங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக சிபாரிசுகள் மூலமாக வரிசையில் நிற்காமல் திடீர், திடீரென உள்ளே சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். இதனால், மணிக்கணக்கான காத்திருக்கும் பக்தர்கள் மேலும் காத்திருக்கும் அவல நிலை உண்டாகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பெரிய, பெரிய கோயில்களில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காணிக்கை கொடுத்தாலே திருநீர் பொட்டலம்:

அண்ணாமலையாருக்கு பூஜித்த திருநீரை அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்க கோயில் நிர்வாகம் சார்பில் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கப்படுகிறது. ஆனால், அந்த பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட திருநீர் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுவதில்லை. அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கு மட்டுமே அந்த பாக்கெட்டில் அடைக்கப்பட்ட திருநீர் வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால் வழங்கப்படுவதில்லை. இது அண்ணாமலையார் கோயிலில் மட்டுமின்றி கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோயில்களிலும் இதே நிலைதான் உள்ளது.

கோயில் அழகை ரசிக்க முடியாத சூழல்:

திருவண்ணாமலை கோயில் என்பது ஆன்மீக தலமாக மட்டுமின்றி தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. இந்த கட்டிட கலைகள் என்பது இன்றுள்ள பொறியாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் சவால்தரும் ஒன்றாகும். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதற்கு முன்பு கோயிலின் பிரதான வாசலான ராஜகோபுரம் உள்ளே சென்றால் அருணகிரி நாதர் கோயிலுக்கு பின்புறம் ஆயிரங்கால் மண்டபம் அருகே அமைந்துள்ள மிகப்பெரிய நந்தியை ரசிக்க இயலும். ஆனால், தற்போது கட்டண தரிசனத்திற்கான வரிசை ராஜகோபுரம் உள்ளே நுழைந்தவுடன் தொடங்குவதால் பொதுதரிசனத்தில் செல்லும் பக்தர்கள் நந்தியை வணங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டண தரிசனத்தில் செல்பவர்களும் கம்பி இடைவெளியில் சென்று நந்தியை வணங்கினாலும் வரிசை போய்விடும் என்ற பதற்றத்தில் செல்வது இல்லை. 

அதேபோல, ராஜகோபுரம் அடுத்த கோபுரம் உள்ளே சென்ற பிறகு கட்டண தரிசனம் எடுக்கும் இடத்தில் உள்ள அழகான குளத்தை அனைவராலும் ரசிக்க முடியாத சூழல் உள்ளது. தடுப்புகளால் அந்த பகுதியில் பக்தர்கள் சென்று வர இயலாத நிலை உள்ளது. பின்னர், அண்ணாமலையார் அருகில் உள்ள அம்பாள் சன்னதி பிரகாரத்தில் அனைத்து பக்தர்களும் அமர்ந்து தரிசிக்கும் சூழல் முன்பு இருந்தது. ஆனால், தற்போது அது இல்லை. மேலும், ராஜகோபுரம் வழியாக நந்தி பெருமானை வணங்கி அந்த கோபுர வாசல் வழியாக சென்று அதே வழியாக மீண்டும் வெளியே வரும் சூழல் இருந்தது. தற்போது அந்த சூழல் இல்லை.

மேலே கூறிய சிரமங்களால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சிரமங்களுக்கு புதியதாக அமைந்துள்ள தவெக அரசு தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.