"மக்களின் ஜனாதிபதி" அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மாளிகையில் வாழ்ந்த போதும் மிக எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்.இந்த நிலையில்,  ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்தார். சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.



இதனை அடுத்து, அவரது  நினைவாக மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதாவது (DRDO) சார்பில் ராமேஸ்வரத்தில் உள்ள பேக் கரும்பில் 'அப்துல் கலாம் தேசிய நினைவகம்' அமைக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடியால்  திறந்து வைக்கப்பட்டது. கலாம் நினைவிடத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தவாறு அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப் புகைப்படங்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள 4 காட்சிக் கூடங்களில் கலாமின் மாணவப் பருவம், விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



நினைவிடத்தை திறந்ததிலிருந்து 2019 ஆண்டு வரை சுமார் 82 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 தேதி கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கலாமின் தேசிய நினைவிடம் மூடப்பட்டது. பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டதுடன், கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் அக்னிக் தீர்த்தக் கடற்கரை மற்றும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கலாம் நினைவிடத்தை பார்வையிட மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து தடை நீடித்து வந்தது.



இதனால் ராமேஸ்வரம் வரும்  சுற்றுலாப் பயணிகள், இளைஞர்கள் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த முடியாமலும், வாசலில் நின்றபடி மணி மண்டப கட்டடத்தை மட்டும் பார்த்து விட்டு செல்பி எடுத்து கொண்டு  ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் தொடர்  கோரிக்கையால் 525 நாட்களுக்கு பின் இன்று காலை 9 மணியில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்தது. இதனையடுத்து இன்று காலை கலாம் பேரன் சலீம் நினைவகத்தை பார்வையிட வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்றார். நினைவகத்தை காண வந்தவர்கள்  கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நினைவகத்தை பார்வையிட்டு வருவதுடன் கலாம் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் சுமார் 17 மாதங்களுக்கு மேலாக வெறிச்சோடி காணப்பட்ட கலாம் நினைவக வளாகம் இன்று சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்பட்டது.


அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு:-


ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம், 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும்  ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமமான ராமேஸ்வரத்தில் பிறந்தார். ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார்.


வறுமையான குடும்ப சூழ்நிலையால் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார். தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள "செயின்ட் ஜோசப் கல்லூரியில்" இயற்பியல் பட்டப்படிப்பு பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை.  விண்வெளி பொறியியல் 1955 ஆம் ஆண்டு தன்னுடைய "விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.



1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இவரது சாதனையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான "பத்ம பூஷன்" விருது வழங்கி கௌரவித்தது.


இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1998ஆம் ஆண்டு நடந்த பொக்ரான்-II அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார் அப்துல் கலாம். 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர், ஜூலை 27, 2015 ஆம் ஆண்டு மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.