ஆடி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம், திருச்செந்துாருக்கு 23, 24ம் தேதிகளில் சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்
தமிழகம் மற்றும் பெங்களூரிலிருந்தும் பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று புண்ணிய ஸ்தலமான ராமேசுவரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதனடிப்படையில் வருகிற நாளை (புதன்கிழமை) அன்று சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேசுவரத்திற்கும் மற்றும் வருகிற 24-ந்தேதி ராமேசுவரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல், 24ம் தேதி திருப்பூரில் இருந்து பழநி வரையும், காங்கயத்தில் இருந்து, கொடுமுடி, பொள்ளாச்சி - ஆனைமலை, சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 'இவ்விரு நாட்களில் மட்டும், 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்' என, திருப்பூர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்பதிவு
www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
ஆடி அமாவாசை
தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து படையலிட்டு வணங்குவதற்கு உகந்த நாளாகும். பொதுவாக ஒரு வருடத்திற்கு 96 முறை முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யவேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசையில் செய்யலாம். அன்று பித்ருலோகத்திலிருந்து தேடி வரும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பதே சாஸ்திரம் சொல்ல கூடிய விதி ஆகும்.
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின்போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாக கூறப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுவதாகவும், அன்றைய தினம் புனித தலங்களில் உள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் என்றும் நம்பப்படுகிறது.
வருடத்தில் முக்கியமான மூன்று அமாவாசையில் அதாவது, ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாட்களில் திதி தர்ப்பணம் கொடுப்பது நல்ல பலனை தரும். தட்சிணாயன காலம் துவங்கி முதலில் வரக்கூடிய அமாவாசை, ஆடி அமாவாசையாகும். ஆகவே ஆடி அமாவாசை சிறப்பு பெறுகிறது.
மேலும் கடக ராசியில் குரு உச்சம் பெறுகிறார். குரு என்பவர் முன்னோர்களை குறிக்கும் கிரகமாகும். மேலும் புத்திர பாக்கியத்தை கொடுக்கும் கிரகமும் அவரே ஆவார். ஆகவே பித்ரு தர்ப்பணத்தை முறையாக மேற்கொண்டால் குடும்பத்தில் வாரிசுகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும். ஜோதிட ரீதியாக பார்த்தால் இருப்பதிலேயே "பித்ரு தோஷமே" தலையாய தோஷமாக கருதப்படுகிறது. பித்ரு தர்ப்பணத்தை முறையாக செய்து குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யும் ஒருவரை எந்த தோஷமும் பாதிப்பதில்லை என்பது நம்பிக்கை. முன்னோர்களின் ஆசிர்வாதம் இவர்களை கவசமாக பாதுகாப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.