Aadhav Arjuna: திமுக மீது கோபம் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.


விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்:


”எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில், திமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழக அரசியலிலும், திமுக தலைமையிலான கூட்டணியிலும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. காரணம், ஆதவ் அர்ஜுனா விஜய்க்கு ஆதரவாக செயல்படுவதாகவும், திமுக - விசிக கூட்டணியை உடைத்து தவெக உடன் கூட்டணி அமைக்க  முயற்சிப்பதாகவும் பரவலாக பேசப்பட்ட நிலையில், அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, தனியார் தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்துள்ளார்.



டார்கெட் செய்த திமுக - ஆதவ் அர்ஜுனா


அதில் பேசியபோது, “புத்தக வெளியீட்டு விழாவிற்கு பல்வேறு அழுத்தங்கள் வந்தன.  ஜனநாயக ரீதியாக செயல்பட முடியாத ஒரு கோபத்தினால் தான் மேடையில் நான் அப்படி பேசினேன். 24 நிமிட என்னுடைய உரையில் கையில் காகிதங்கள் கூட ஏதுமில்லை. மனதில் இருந்ததை வெளிப்படையாக பேசினேன். திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா கட்சி தலைமையை ஏற்று எனக்கு எதிராக அப்போது பேட்டி அளித்தாரோ, அன்றிலிருந்தே திமுக என்னை டார்கெட் செய்ய தொடங்கி விட்டது. 


”திருமாவளவனிற்கு அழுத்தம்”


புத்தக வெளியீட்டு விழாவை ஒரு எளிமையாக நிகழ்வாக கடந்து சென்று இருக்கலாம். ஜனநாயகமான நிகழ்வாகவும், சாதாரண புத்தக வெளியிட்டு விழாவாகவும் பார்த்து இருக்கலாம். புத்தக வெளியீட்டு விழாவால் கூட்டணி உருவாகும் என நினைப்பது, முதிர்ச்சியற்ற தன்மை என்று தான் கூற வேண்டும். திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவை சந்திக்கும்போது, நீங்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றால் கூட்டணிக்குள் பிரச்னை வந்துவிடும் என திருமாவளவனிடம் தெரிவித்தார். புத்தக விழாவிற்கு செல்லக் கூடாது என முதலமைச்சர் சொன்னதாக,  திருமாவளவனிடம் அமைச்சர் எ. வ. வேலு சொல்லி இருக்கிறார். அது அந்த கட்சியின் நிலைப்பாடாக இருக்கலாம், ஆனால் அதை திருமாவளவனிடம் ஏன் சொல்ல வேண்டும்?


”திமுக மீது கோபம்”


18 மாத காலம் உழைத்து அந்த புத்தகம் உருவானது. அதன் வெளியீட்டு விழாவிற்கு வருவதாக திருமாவளவனும் ஒப்புக் கொண்டார். விஜயும் ஒப்புக் கொண்டார். ஆனால், கொள்கை மாற்றங்கள் இருப்பவர்கள் ஒரே மேடையில் தோன்றக் கூடாதா? கருணாநிதி தொடர்பான நிகழ்விற்காக ராஜ்நாத் சிங் வந்திருந்தார் அல்லவா? 


மகனின் திருமணத்திற்கு தந்தை வரவேண்டும் என மகன் விரும்புவது இயல்பு தானே. அந்த வகையில் தான் எனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருமாவளவன் வரவேண்டும் என விரும்பினேன். ஆனால், ஆனால் அவரை வரவேண்டாம் என திருமாவளவனிடம் சொன்னவர்கள் மீது கோபம் ஏற்படத்தானே செய்யும்” என ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.