பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றொரு சான்றாக உள்ளதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

Continues below advertisement

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுகை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Continues below advertisement

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. கோவையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி,  நேற்று ஞாயிறு இரவு, கோவை விமான நிலையம் அருகே தனது  நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் அங்கே வந்த மூன்று பேர் காரில் அமர்ந்திருந்த அந்த மாணவியின் நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். பிறகு, அதே பகுதியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் தனது செல்போன் மூலமாக பீளமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு சான்றாக உள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பொதுவெளியில் அவர்கள் அச்சமின்றி பயணிக்கின்ற பாதுகாப்பான சூழலை ஒரு அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கடமை. ஆனால், தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடங்கி, தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்கு இந்த அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் செயல்களுக்குக் காரணமாக, பெரும்பாலான வன்முறைகளுக்குக் காரணமான மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையோ, அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் பாதிக்கப்பட்ட மாணவி அவர்கள் விரைவில் நலம்பெறவும், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்து, சட்டத்தின் முன் அவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.