சென்னை பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரு பேனர்கள் கூட வைக்கப்படாத சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. 

Continues below advertisement

எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு

சென்னை பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து ஜூலை 13ம் தேதியான நேற்று அங்கு எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. கடந்த இரு மாத காலமாக அந்த அலுவலகம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்படியான நிலையில் பெரம்பூர் தொகுதியே விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில் விஜய் தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் புதிதாக குடும்ப அட்டை விநியோகம் செய்யும் பணியையும், அதன்பின்னர் அங்கிருக்கும் வியாசர்பாடி பணிமனையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக மின்சார பேருந்து பணிமனையில் ஆய்வு மேற்கொண்டார். 

Continues below advertisement

பேனர்கள் வைக்காததால் ஆச்சரியம்

இதனிடையே விஜயை வரவேற்று ஆச்சரியமளிக்கும் விதமாக பெரம்பூர் தொகுதியில் எங்கும் பேனர்கள் வைக்கப்படவில்லை. மேலும் அவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடினர். அவர்கள் கண்டுகளிக்கும் வண்ணம் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு விஜய் அவர்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார். பொதுவாக முதலமைச்சர் தன் தொகுதியில் ஒரு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வருகிறார் என்றால் பேனர்கள், கட் அவுட்கள், தோரணங்கள், போஸ்டர்கள் என அந்த இடமே களைகட்டும் அளவுக்கு இருக்கும். ஆனால் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற நிகழ்வில் அப்படி எதுவும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் நிம்மதியாக அவரைப் பார்த்துச் சென்றனர். 

திருந்துவார்களா தவெக எம்.எல்.ஏ.,க்கள்?

ஆனால் தவெக எம்.எல்.ஏ.க்களில் சிலர் இன்னும் திருந்தியபாடில்லை. தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பேனர், போஸ்டர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், இதனால் மக்கள் அதிகளவில் துன்பப்படுகிறார்கள், உயிரிப்புகள் வரை செல்கிறது என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் தவெக எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை அறிவுறுத்தியும் யாரும் கேட்பதாக இல்லை. 

Also Read: Raja Kannappan: அசால்ட்டா இருந்துட்டோம்.. தவெக வந்துட்டு.. இனி நாங்க தான்.. ராஜகண்ணப்பன் சவால்!

குறிப்பாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினரான ஈசிஆர் சரவணன் தொகுதி முழுக்க போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டு மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இது தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் நடந்து வருகிறது. காவல்துறை அனுமதியுடன் தான் பேனர் வைக்க முடியும் என்றாலும் காற்று போன்ற காரணிகளால் அது சரிந்து மக்கள் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி வருகிறது. போட்டிப்போட்டுக் கொண்டு போஸ்டர்கள் ஒட்டி ஊரையே அலங்கோலப்படுத்தவும் அரசியல்வாதிகள் தயங்குவதில்லை. தவெக ஆட்சி வந்ததில் இருந்து இதற்கு ஒரு முடிவு இருக்கும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நாங்கள் தலைமை பேச்சையே கேட்க மாட்டோம் என்ற ரீதியில் அனைவரும் செயல்பட்டு வந்தனர். 

தற்போது அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் நடத்தி காட்டியிருக்கிறார். இனியாவது மற்ற தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் மாற வேண்டும். மாற்றத்திற்கான வழியை வகுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.