மாணவன் மற்றும் அவரது தந்தை மரணத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினே  பொறுப்பு என்று தமாகா கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


''சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை செல்வசேகர் தற்கொலை செய்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையளிக்கிறது.


நடைபெற்று வரும் கல்வி தற்கொலைகளுக்கு தமிழக அரசே காரணம். மாநில அரசின் கையில் இல்லாத அதிகாரத்தை, தங்களிடம் இருப்பதாக தேர்தல் வாக்குறுதியில் பொய்யான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள். அதன் அடிப்படையில் தமிழக மாணவர்கள், திமுக அரசால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அதிகமாக நம்பினர். அதில் ஏற்படும் தோல்விகளே நடைபெற்று வரும் தற்கொலைகளுக்குக் காரணமாகும்.


 உயர் கல்வித் தேர்விற்கு அவகாசம் தேவை
 
மத்திய அரசு நீட் தேர்வு மாணவர்களுக்கான மருத்துவ தகுதி அடிப்படை என்ற வகையில் அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். முற்போக்கான கல்வித் திட்டங்கள் ஏதும் இல்லாத தமிழகத்தில் நீட் தேர்வு போன்ற உயர் கல்வித் தேர்விற்கு அவகாசம் தேவை என்பதே தமாகாவின் அடிப்படை கோட்பாடாகும். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே தமாகாவின் கல்விக் கொள்கையில் ஒன்று. 


ஆனால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க முன்னணித் தலைவர்கள் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்ய இருப்பதாகவும் அதற்குண்டான ரகசிய திட்டம் தங்கள் இடத்தில் உள்ளதாகவும்  கூறினார்கள், தங்களுடைய வாக்குறுதி  வெற்றி பெறாது என்பது தெரிந்திருந்தும் தமிழக அரசு தன்னால் முடியாத ஒன்றை செய்யப் போவதாக பொய் வாக்குறுதி கொடுத்து, பொது மக்களை வஞ்சித்து வருகிறது. 


உச்ச நீதிமன்றமும் நீட் தேர்வில் தலையிட இயலாது என்று அறிவித்தபின், மாநிலத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும் அதை அரசு  முறையாக வழிநடத்தும் என்று தமிழக முதல்வர், கல்வித் துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கைகளை வெளியிட்டு மீண்டும், மீண்டும் தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன் நீட் தேர்வு  ரத்து செய்வோம் என்று சொன்னீர்கள்? ஆட்சிக்கு வந்த பிறகு அனிதா பெயரில் நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று கூறினீர்கள்? இதுவரை தமிழகம்  முழுவதும் எத்தனை அனிதா நீட் பயிற்சி மையங்கள் தொடங்கினீர்கள்? அதில் எத்தனை மாணவர்கள் பயன் பெற்றார்கள்? எத்தனை காலங்களுக்குத்தான் விளம்பர மாடலாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். 


விளம்பரம் தேடிக் கொள்வது ஏன்? 


நீட் தேர்வு எதிர்த்து அறிக்கை விடுவது ஒரு புறம்  இருக்க நீட் தேர்வில்  தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுப்பதும் அவர்களை அருகில் நிற்க வைத்து விளம்பரம் தேடிக் கொள்வதும் ஏன்? 25 லட்சத்தை காரணம் காட்டி மாணவன் இறந்ததாக கூறும் அரசு ஏதோ நன்கொடை என்பது நீட் தேர்விற்கு பிறகுதான் வந்தது போல் காட்சிப்படுத்துகிறது. ஆனால் நீட் தேர்வு என்று ஒன்று வந்த பிறகுதான் நன்கொடை இல்லாமல் மருத்துவத்தை மாணவர்கள் படிக்க வசதியாக உள்ளது. நீட் என்ற தேர்வு வருவதற்கு முன் கோடிக்கணக்கில் மக்கள்  மருத்துவ படிப்பிற்கு செலவிட்டனர் என்பதை அரசு மறுக்க முடியுமா?


தமிழகத்தில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகின்றது, ஜாதிகள் பெயரில் மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் தலைவிரித்தாடுகிறது. இதில் எல்லாம் கவனம் மேற்கொள்ளாத முதல்வர்,  நீட் தேர்வு தோல்வியில் இறந்த குடும்பத்திற்கு ஆதரவு என்ற பெயரில் ஆளுநரையும், மத்திய அரசையும்  குறிப்பிட்டு அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும். 'கையெழுத்து போடமாட்டேன்' என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என்று வீரவசனம் பேசுகிறீர்கள்.


இப்பொழுது வரை நடைபெற்று வரும் தற்கொலைகள் தாங்க முடியாத துயரத்தைத் தருகிறது. இந்த வேதனைகளுக்கு முடிவு ஆளும் திமுக அரசு தனது தவறான, பொய்யான வாக்குறுதிகளை வாபஸ் பெற்றுக்கொண்டு மத்திய அரசு நீட் தேர்வு ரத்து செய்யும் வரை தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக ஒரு உயிர் என்பது விலை மதிப்பற்றது, எதற்காகவும் இழக்கப்படக்கூடாதது என்பதை மாணவர்களாகிய நீங்கள்  உணர வேண்டும்; இனிமேலாவது கல்விக்காக தற்கொலைகளை தவிர்க்க வேண்டும் என்று தமாகா இளைஞர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்''.


இவ்வாறு தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார்.