செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போக்குவரத்து விதிமுறைகளைத் துச்சமாக மதித்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காதல் ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் அநாகரீக பயணம்
தேர்தல் வாக்குப்பதிவை முடித்துவிட்டு தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி நேற்று இரவு ஏராளமானோர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுராந்தகம் சுங்கச்சாவடி அருகே காரில் வந்து கொண்டிருந்த பயணிகள், தங்களுக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வாகனத்தில் ஒரு காதல் ஜோடி, போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலுமாக மீறி, பெண்ணை பெட்ரோல் டேங்க் மீது (முன்புறம்) அமர வைத்து, கட்டி அணைத்தபடி ஆபத்தான முறையில் பயணித்தனர். இரவு நேரத்தில் பொதுமக்களும், மற்ற வாகன ஓட்டிகளும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்த இந்தச் செயலை, பின்னால் வந்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
24 முறை அபராதம்: கண்டுகொள்ளாத வாகன ஓட்டி ?
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த வாகனத்தின் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த இருசக்கர வாகனத்தின் மீது ஏற்கனவே பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 24 முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இத்தனை முறை அபராதம் விதிக்கப்பட்டும், சட்டத்தை மதிக்காமல் மீண்டும் அதே போன்ற அநாகரீகமான மற்றும் ஆபத்தான செயலில் அந்த நபர் ஈடுபட்டுள்ளார் என்பது வாகன ஓட்டிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினருக்கு கோரிக்கை
பொதுவெளியில் கண்ணியமற்ற முறையிலும், மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையிலும் செயல்படும் இத்தகைய நபர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வெறும் அபராதத்தோடு நிறுத்தாமல், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் அந்த நபரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இருவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
