தமிழகமே ஷாக்! .. நடுவானில் உடைந்த கண்ணாடி.. நடுரோட்டில் தரையிறங்கிய விமானம்!
சம்பந்தப்பட்ட விமானம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் விமானப் பயிற்சி நிறுவனமான EKV Air நிறுவனத்திற்குச் சொந்தமானது என தெரிய வந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீரென தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பயிற்சி விமானம் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக விமானத்தில் செல்ல வேண்டும் என்பது அனைவரது ஆசையாக இருக்கும். அதேசமயம் விமானம் எங்கு பறந்தாலும் நாம் தலையை உயர்த்தி அது நம் கண் பார்வையில் இருந்து மறையும் வரை ஆவலுடன் பார்ப்போம். வெளிநாடுகளில் விமானம் அவசர காலங்களில் வாகனங்கள் செல்லும் சாலைகளில் தரையிறங்கிய செய்தி கேட்டு ஆச்சரியப்படுவோம். அப்படியான ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. என்ன நடந்தது என பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தான் நவம்பர் 13ம் தேதியான வியாழக்கிழமை பிற்பகலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தனியார் பயிற்சி விமானம் ஒன்று அப்பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அதனை ஓட்டிய விமானி அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்.
ஆனால் அருகில் ஓடுதளம் இல்லாத நிலையில் சற்றும் தாமதிக்காமல் நடுரோட்டில் அதாவது நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்கினார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உள்ளே இருந்த விமானி மற்றும் ஒரு பயிற்சியாளர் ஆகிய இருவரும் காயமின்றி தப்பினர். இதனைத் தொடர்ந்து விமானத்தைக் காண அப்பகுதி மக்கள் திரண்டனர். இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து விமானியிடம் விசாரணை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட விமானம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனியார் விமானப் பயிற்சி நிறுவனமான EKV Air நிறுவனத்திற்குச் சொந்தமானது என தெரிய வந்தது. Cessna 172 என்ற அந்த விமானம், சேலம் விமான நிலையத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்தது.
சரியாக மதியம் 12:45 மணியளவில் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டதை விமானி கவனித்துள்ளார். இதனால் விபத்தைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக அவர் திருச்சி மற்றும் புதுக்கோட்டையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி அம்மாசத்திரம் கிராமத்திற்கு அருகில் கீரனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் விமானம் தரையிறக்கப்பட்டது.
மேலும் நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்ட இந்த விமானம் மும்பையைச் சேர்ந்த சச்சின் பானே என்பவருக்குச் சொந்தமானது என்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விமானத்தை அங்கிருந்து மீண்டும் கொண்டு செல்வதற்கு முன்பு முழுமையாக ஆய்வு செய்து பிரச்னையை சரிசெய்ய சென்னையில் இருந்து ஒரு தொழில்நுட்பக் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவல்துறை அதிகாரிகள் சரி செய்தனர்.




















