திருச்சி: திருச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த திருட்டு, வழிப்பறி சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுமக்களும் வியாபாரிகளும் ஒன்றிணைந்து சுமார் ரூ.40 லட்சம் செலவில் 200 சிசிடிவி கேமராக்களை நிறுவி தங்களது பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

Continues below advertisement

அரசு நிர்வாகத்தையும், காவல்துறையையும் மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்காமல், “நமக்கு நாமே” என்ற அடிப்படையில் மக்கள் தங்களது சொந்த நிதிப் பங்களிப்புடன் மேற்கொண்ட இந்த முயற்சி, திருச்சியில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Continues below advertisement

50-க்கும் மேற்பட்ட தெருக்களில் திருட்டு அச்சம்

திருச்சி மாநகராட்சியின் 20-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய கடை வீதி, காந்தி சந்தை, மலைக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள பகுதியில் சுமார் 50 வணிக மற்றும் குடியிருப்புத் தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் தனித்தனி காம்பவுண்ட் சுவர்கள் இல்லாமல் ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி அமைந்துள்ளன. இதனால் தெருக்களுக்கு இடையே உள்ள குறுகலான சந்துகள் மற்றும் பாதைகள் அதிகமாக காணப்படுகின்றன.

இந்த சூழலை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோடை காலங்களில் ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளை திறந்து வைத்து மக்கள் தூங்குவதை பயன்படுத்தி அதிகாலை நேரங்களில் வீடுகளுக்குள் கைவரிசை காட்டப்பட்டு வந்துள்ளது.

ஜன்னல் அருகே வைத்த செல்போன்... வாசலில் நின்ற பைக்!

வீடுகளின் ஜன்னல் அருகே வைக்கப்பட்டிருந்த செல்போன்கள், பணப்பைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. அதேபோல் வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களும் தொடர்ந்து திருடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த திருட்டுச் சம்பவங்களில் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறுகலான சந்து பாதைகள் அதிகம் இருப்பதால், திருட்டில் ஈடுபடுவோர் சம்பவத்துக்குப் பிறகு வேகமாக தப்பிச் செல்லும் வாய்ப்பும் இருந்துள்ளது. வணிக நிறுவனங்கள் மற்றும் முக்கிய கடைகள் முன்பு மட்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததால், குற்றச்சம்பவம் நடைபெற்றபோது குற்றவாளிகள் எந்த வழியாக வந்து சென்றனர் என்பதை முழுமையாக கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

“நமக்கு நாமே” திட்டத்தில் புதிய முயற்சி

தொடர்ந்து நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முடிவு செய்த பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் ஒன்றிணைந்தனர். வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி. கே.சங்கர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டதுடன், மாநகராட்சியின் ‘நமக்கு நாமே’ திட்ட நிதியுதவியும் இணைக்கப்பட்டு சிசிடிவி கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பகுதி முழுவதும் முக்கியமான 200 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

7 இடங்களில் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர்கள்

கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ஒருங்கிணைத்து சேமிப்பதற்காக 7 முக்கிய இடங்களில் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர்கள் (NVR) நிறுவப்பட்டுள்ளன. முந்தைய காலங்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெற்ற இடங்கள், முக்கிய தெருச்சந்திப்புகள், குறுகலான சந்து பாதைகள் மற்றும் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேறும் முக்கிய சாலைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கேமராக்கள் தொலைநோக்குக் கோணத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சிசிடிவி அமைப்பில் பதிவாகும் காட்சிகள் 7 முதல் 10 நாட்கள் வரை சேமித்து வைக்கும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் செல்போனிலேயே நேரடி கண்காணிப்பு

இந்த பாதுகாப்பு நடவடிக்கையின் மற்றொரு சிறப்பம்சமாக, நிதிப் பங்களிப்பு செய்த குடியிருப்புவாசிகளின் கைபேசிகளிலேயே சிசிடிவி காட்சிகளை நேரலையாக பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தேகத்துக்குரிய நபர்கள் நடமாட்டம், இரவு நேரங்களில் நடைபெறும் அசாதாரண செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை பொதுமக்களே உடனடியாக கண்காணிக்க முடியும்.

மேலும், கேமராக்களுக்கு தேவையான மின்சார வசதியையும் பகுதி மக்களே வழங்க முன்வந்துள்ளனர். சிசிடிவி அமைப்பை தொடர்ந்து பராமரிப்பதற்காக மாதம் சுமார் ரூ.5,000 செலவையும் பொதுமக்களே பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

திருடர்களுக்கு அச்சம்... போலீசாருக்கு ஆதாரம்!

பெரிய கடை வீதியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் நள்ளிரவு வரை பல்வேறு பணிகளில் ஈடுபடுவதுடன், அதிகாலை முதலே தங்களது அன்றாட பணிகளை தொடங்கி வருகின்றனர். ஆள்நடமாட்டம் உள்ள நேரங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்ததால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வந்தது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள 200 சிசிடிவி கேமராக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். மேலும், குற்றச்சம்பவம் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணவும், அவர்கள் தப்பிச் சென்ற பாதையை கண்டறியவும் காவல்துறைக்கு இந்த காட்சிகள் முக்கிய ஆதாரமாக அமையும் என்று பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கே முன்மாதிரி

பொதுமக்களின் பாதுகாப்பு என்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல; தங்களது சுற்றுப்புற பாதுகாப்பிலும் பொதுமக்கள் பங்களிக்க முடியும் என்பதை திருச்சி பெரிய கடை வீதி பகுதி மக்கள் நிரூபித்துள்ளனர். அரசாங்கத்தையோ, காவல்துறையையோ மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்காமல், வியாபாரிகளும் குடியிருப்புவாசிகளும் ஒன்றிணைந்து ரூ.40 லட்சம் செலவில் 200 சிசிடிவி கேமராக்களை நிறுவியிருப்பது, சமூக ஒற்றுமைக்கும், மக்கள் பங்களிப்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

குற்றங்களைத் தடுப்பதுடன், குற்றம் நடைபெற்றால் விரைவாக விசாரணை நடத்துவதற்கும் இந்த கண்காணிப்பு அமைப்பு உதவும் என்பதால், தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதுபோன்ற மக்கள் பங்களிப்புடன் கூடிய பாதுகாப்பு முயற்சிகள் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.