தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட சுழற்சியின் தாக்கத்தின் கீழ்; தென்மேற்கு ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  சூறாவளி சுழற்சி உடன்  கடல் மட்டத்திலிருந்து 5.8 கிமீ தொலைவில்  நிலைகொண்டுள்ளது. இது 24 மே, 2024 காலை வடகிழக்கு நோக்கி நகர்ந்து, வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும், இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் கடுமையான வெப்பநிலை பதிவானது. ஆனால் மே மாதம் தொடங்கி அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் வெப்பநிலை குறைந்து பதிவானதோடு, நல்ல மழை பதிவாகி வருகிறது.


இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது. ஆனால் இது புயலாக வலுப்பெற்றாலும் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாது என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், நாளை தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)


ஆழியார் (கோவை மாவட்டம்) 15,  திருமூர்த்தி அணை (திருப்பூர் மாவட்டம்), திருமூர்த்தி ஐபி (திருப்பூர் மாவட்டம்) தலா 14,  அமராவதி அணை (திருப்பூர் மாவட்டம்) 12,  கொட்டாரம் (கன்னியாகுமரி மாவட்டம்) 9,  மாக்கினாம்பட்டி (கோவை மாவட்டம்), பொதுப்பணித்துறை வாரப்பட்டி (கோவை மாவட்டம்) தலா 8,  குளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம்), மடத்துக்குளம் (திருப்பூர் மாவட்டம்), ஆர்எஸ்சிஎல்-3 செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்), திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்) தலா 7,  சந்தியூர் கேவிகே ஏடபிள்யூஎஸ் (சேலம் மாவட்டம்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி மாவட்டம்), தரமபுரி (தருமபுரி மாவட்டம்), மைலாடி (கன்னியாகுமரி மாவட்டம்), சேத்பேட்டை (திருவண்ணாமலை மாவட்டம்), தருமபுரி பிடிஓ (தருமபுரி மாவட்டம்), கோவை தெற்கு (கோவை மாவட்டம்) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.