சேலம் மாநகர் மூன்று ரோடு பகுதியில் சுமார் 46 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியை பராமரிக்க சேலம் மாநகராட்சி சார்பாக சுமார் 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதுவரை ஏரியின் 90 சதவீத பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் பள்ளப்பட்டி ஏரியில் ஏரி பூங்காவில் மலை போன்ற அமைப்பை கொண்ட பூங்கா, சிறுவர்கள் விளையாடும் திடல், பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் பாதை, உடற்பயிற்சி செய்வதற்கு தனி இடம் என அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் இன்று சிறுவர்கள் அமர்ந்து விளையாடும் மலை போன்ற வடிவிலான பூங்காவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மலை போன்ற வடிவமைப்பு முழுவதுமாக எரிந்து நாசமாகியது. அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் தீ விபத்து ஏற்படவில்லை. தீ அருகில் பரவுவதை தவிர்ப்பதற்காக அருகில் இருந்த அட்டை பொம்மைகள் பொதுமக்களால் அகற்றப்பட்டன. இதுகுறித்து உடனடியாக சூரமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்பு புகை சூழ்ந்தது. 



தீ விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில், "மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் குடும்பத்துடன் நாள்தோறும் வந்து செல்வது வழக்கம். இங்கு அமைக்கப்பட்டுள்ள மலை பூங்காவில் சிறுவர்கள் ஆர்வமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். இந்த மலை பூங்கா பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கும். மலை பூங்காவில் சிறுவர்களை கவரும் வகையில் அணில், குரங்கு, பல வகையான பறவைகள், மான், யானை போன்ற தோற்றமுடைய பொம்மைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதை சிறுவர்கள் பார்த்து மகிழ்ந்து செல்வார்கள். இந்த நிலையில் மலை பூங்காவில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் முழுவதுமாக எரிந்தது. மேலும் இந்த பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என்றும், இந்த பூங்காவில் சமூக விரோதிகள் அமர்ந்து மது அருந்துவது, சீட்டு விளையாடுவது போன்ற சமூக விரோத செயல்களின் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பூங்காக்குள் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் வருவதற்கு அச்சமாக உள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் இந்த பூங்காவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கி பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.



தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பள்ளப்பட்டி ஏரி பூங்காவை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார். 


சேலம் மாநகர பகுதியில் அமைந்துள்ள பள்ளப்பட்டி ஏரியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.