தென்காசி மாவட்டத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரத்தில் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. அங்குள்ள கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்புத்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புளியங்குடி சரக காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


முதற்கட்ட தகவலின்படி, இந்த விபத்தில் கார்த்திக், வேல், மனோஜ், சுப்பிரமணியன், மனோகரன், போத்திராஜ் ஆகிய 6 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த 6 பேரும் குற்றாலத்தில் குளித்து விட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக கொல்லம் - மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு பணிகள் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.