தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ 13 வேட்பாளர்களிடம் இருந்து 18 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் ஒரு வேட்பு மனுவையும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் 3 வேட்பு மனுக்களையும், திமுக சார்பில் கிரிராஜன், சு.கல்யாண சுந்தரம் ஆகியோர் தலா இரண்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்தனர்.
போட்டியின்றி தேர்வு
அதே போல அதிமுகவைச் சேர்ந்த ஆர். தர்மர் ஒரு வேட்புமனுவையும், திமுக சார்பில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இரு வேட்பு மனுக்களையும் அளித்த நிலையில், சுயேட்சைகளான அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி, தேவராஜன், பத்மராஜன், மன்மதன், வேல்முருகன் சோழகனார் தலா ஒரு மனு அளித்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் கடந்த ஜனவரி மாதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதில் 6 வேட்பாளர்களின் 11 வேட்புமனுக்கள் செல்லத்தக்கதாக உள்ளதாக கூறி அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று வரை திரும்பபெற வில்லை. இந்தத் தேர்தலில் காலியிடங்களின் எண்ணிக்கை 6 ஆக உள்ள நிலையில் போட்டியிட வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது.
இரண்டும் சமமாக உள்ளதால், சட்டப்பிரிவு 53/2 இன் படி, அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம் திமுகவைச் சேர்ந்த சு.கல்யாண சுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என் ராஜேஸ்குமார்,ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.” என்று அறிவித்துள்ளார்.