தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் 24-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், கொரோனா கட்டுக்குள் வராத காரணத்தால் ஊரடங்கை எந்த தளர்வுகளும் இன்றி மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஊரடங்கு காரணமாக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் இன்று இரவு வரை 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து 1,500 பேருந்துகளும், பிற ஊர்களில் 3 ஆயிரம் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், தமிழக போக்குவரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பொதுமக்கள சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து பயணித்திட ஏதுவாக, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 1,500 பேருந்துகளும், மாநிலத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3 ஆயிரம் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முதல் இன்று மாலை 6 மணி வரையில், சென்னையில் இருந்து 1,331 பேருந்துகள் இயக்கப்பட்டு 65 ஆயிரத்து 746 பயணிகளும், மற்ற பிற ஊர்களில் இருந்தும் 3 ஆயிரத்து 662 பேருந்துகளும் பல நடைகள் இயக்கப்பட்டு 5 லட்சத்து 94 ஆயிரத்து 638 பயணிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 993 பேருந்துகளில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 384 நபர்கள் பயணம் செய்துள்ளனர்.




நேற்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மதுரையில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படுகிற பேருந்துகள் இயக்கத்தினை பார்வையிட்டு மக்கள் எந்த சிரமுமின்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்திட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதோடு, 24 மணிநேரமும் இப்பணியினை உடன் இருந்து கண்காணித்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இன்று இரவு 7 மணியளவில், போக்குவரத்துறை அமைச்சர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதை ஆய்வு செய்தார். மேலும், நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துள் மற்றுமு் பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடம் அரசுஅறிவித்துள்ள நோய் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.


இன்று இரவு 11.45 மணி வரை இயக்கப்படுகிற பேருந்துகளை பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின்போது சொந்த ஊர்களுக்கு செல்லாமல் வெளியூர்களில் சிக்கிக் கொண்ட பயணிகள் இந்த இரு நாள் பேருந்து சேவைகள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.