Thoothukudi Protest: துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.. தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் 100வது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணியாக சென்றனர். அப்போது இந்த பேரணியில் கலவரம் வெடித்தது. அப்போது கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில்  2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 

நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை அப்போதைய அதிமுக அரசு மூடி சீல் வைத்தது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்த ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை திறக்க வேண்டும் என ஒரு பக்கம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மறுபக்கம் அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. 

விசாரணை ஆணையம் அறிக்கை 

இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கை கடந்தாண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடு, அலட்சியம் ஆகியவையே பேரணி கலவரமாக காரணம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. 

மேலும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு, எதிர்காலத்தில்   இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஆணையத்தின் பரிந்துரையைஏற்று  தமிழ்நாடு அரசு உடனடியாக சம்பந்தப்பட்டஅதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்தது.

5ஆம் ஆண்டு நினைவு தினம்

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முத்துநகர் கடற்கரையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி  செலுத்த ஏற்பாடு போன்ற சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முன் அனுமதி பெற்று குமரெட்டியாபுரம், தோமையார் கோயில் தெரு, பூபாலராயர்புரம், முத்தையாபுரம், லயன்ஸ்டவுன், , தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர் ஆகிய பகுதிகள் நடைபெறும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்றைய தினத்தில் மாவட்டத்தில் செயல்படும் 53 டாஸ்மாக் கடைகளும், பார்களையும் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக முத்துநகர் கடற்கரை பூங்கா நேற்று போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. . 

Continues below advertisement