இலங்கையின் தெற்கு பகுதியில் பட்டப்பகலில் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தெற்கு பகுதியில் இருக்கும் பெலியட்டா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு ஜீப் முன்னே சென்ற வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். 


அதனை தொடர்ந்து, ஜீப்பில் இருந்த மர்ம நபர்கள், வழிமறித்த வாகனத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் 5 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொருவரை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.


ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் பரபரப்பான நெடுஞ்சாலையில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கூலிப்படை கும்பலை சேர்ந்தவர்களே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கூலிப்படை கும்பல்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கையை போலீசார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதும், இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்திருக்கும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இதை தொடர்ந்து இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.