தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.


கடந்த 2021 ஆம் ஆண்டில், திமுக ஆட்சி தொடங்கிய பின் 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன.


முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு:


முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1.90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.


இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.


மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன்எப்போதும் இல்லாத அளவாக, 631 ஒப்பந்தங்கள் மூலம் 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின்மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் 61601 மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டன.


ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி:


நான்காம் கட்டமாக, 27-1-2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிலுள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன் வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்கள். அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.


ஐந்தாவது கட்டமாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 22-9-2024 அன்று அமெரிக்கா பயணம் மேற்கொண்டு உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும் ஆற்றல் வாய்ந்த மனித வளங்களையும் எடுத்துரைத்து தொழில் தொடங்கிட வருமாறு அழைப்பு விடுத்தார்கள். அதன் பயனாக அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 11,516 புதிய வேலை வாய்ப்புககள் உருவாக்கப்பட்டுள்ளன.