நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய தூணாக இருப்பது வங்கிகள் ஆகும். வங்கிகளில் வாடிக்கையாளர்கள் அதிகளவு சந்திக்கும் இடர்பாடுகளாக இருப்பது செக் எனப்படும் காசோலை மோசடி ஆகும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பணம் தர வேண்டிய நிறுவனங்கள், நபர்கள் அளிக்கும் பணத்திற்கான காசோலையை வங்கிகளுக்கு எடுத்துச் சென்று பணம் கேட்கும்போது, அந்த காசோலையில் குறிப்பிட்டுள்ள பணம் இல்லாததையே செக் பவுன்ஸ் ஆகிவிட்டது என்று குறிப்பிடுவார்கள். இதனால் பாதிக்கப்படும் நபர்கள் நீதிமன்றங்களை நாடுவார்கள்.


காசோலை மோசடி வழக்குகள்:


டெல்லியில் சமீீபத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேவால் எழுத்து வடிவில் பதில் ஒன்று அளித்தார். அதில், நாட்டில் மொத்தம் நிலுவையில் உள்ள வங்கிக் காசோலை மோசடி குறித்த விவரங்களை அளித்திருந்தார். நாடு முழுவதும் மொத்தம் 43 லட்சத்து 5 ஆயிரத்து 932 காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன்படி, நாட்டிலே அதிகளவு செக் பவுன்ஸ் (காசோலை மோசடி) நடக்கும் மாநிலமாக ராஜஸ்தான் திகழ்கிறது. 

தமிழ்நாட்டில் இத்தனை லட்சம் வழக்குகளா?


ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் இதுவரை காசோலை மோசடி வழக்குகள் 6 லட்சத்து 41 ஆயிரத்து 898 வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இரண்டாவது இடத்தில், மகாராஷ்ட்ரா மாநிலம் உள்ளது. அந்த மாநிலத்தில் 5 லட்சத்து 89 ஆயிரத்து 836 வழக்குகள் உள்ளது. தமிழ்நாடு இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் செக் பவுன்ஸ் வழக்குகள் 1 லட்சத்து 51 ஆயிரத்து 932 உள்ளது.


காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள மாநிலங்கள்:


1. ராஜஸ்தான் - 6 லட்சத்து 41 ஆயிரத்து 898 
2. மகாராஷ்ட்ரா - 5 லட்சத்து 89 ஆயிரத்து 836 
3.குஜராத் - 4 லட்சத்து 73 ஆயிரத்து 236 
4. டெல்லி - 4 லட்சத்து 54 ஆயிரத்து 653 
5.உத்தரபிரதேசம் - 3 லட்சத்து 76 ஆயிரத்து 298 
6. மே.வங்காளம் - 2 லட்சத்து 86 ஆயிரத்து 191
7. ஹரியானா - 2 லட்சத்து 40 ஆயிரத்து 843 
8. மத்திய பிரதேசம் - 1 லட்சத்து 92 ஆயிரத்து 120
9.தமிழ்நாடு - 1 லட்சத்து 51 ஆயிரத்து 932 
10. பஞ்சாப் - 1 லட்சத்து 50 ஆயிரத்து 357


இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்று வங்கி காசோலை மோசடி நடக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.