சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, ஜூன் 14, 2023 அன்று, பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் (ED) கைது செய்யப்பட்ட அமைச்சர் வி. செந்தில்பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை (HCP) மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிப்பார் என்று அறிவித்த நிலையில், இன்று மதியம் இந்த வழக்கு அவர் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


மூன்றாவது நீதிபதி ஏன்?


நீதிபதிகள் ஜே. நிஷா பானு மற்றும் நீதிபதிகள் டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜூலை 4-ஆம் தேதி வழங்கிய தீர்ப்புகள் ஒன்றுக்கு ஒன்று நேர்மாறாக இருந்ததால், இந்த வழக்கை புதிதாக விசாரிக்க மூன்றாவது நீதிபதியை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நீதிபதி கார்த்திகேயன் மீண்டும் வாதங்களைக் கேட்டு அவரது தீர்ப்பை வழங்குவார். அதன் பின் தற்போது 1:1 என இருக்கும் தீர்ப்புகள், 2:1 என்ற பெரும்பான்மையில் ஒரு பக்கம் சாயும். அந்த 2 என்ற பக்கத்தை பெரும் தீர்ப்பு இறுதி தீர்பாக கருதப்படும்.



ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகள்


செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் ஜே.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் இருவராலும் வழங்கப்பட்டது. அப்போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்பை கொடுத்தனர்.


தொடர்புடைய செய்திகள்: Karnataka High Court: பெண் என்ற காரணத்துக்காக ஜாமீன் வழங்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி.. வழக்கு பின்னணி என்ன?


மாறுபட்ட தீர்ப்புகள்


செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தது சட்டவிரோதமானது என நீதிபதி ஜே.நிஷா பானு தெரிவித்த நிலையில், அவரை உடனடியாக காவலில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததில் முறைகேடு இல்லை என்றும், 10 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும், மேல் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் இருந்தபடி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் கூறி, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.



இன்று முடிவு தெரியும்


இதையடுத்து இரு நீதிபதிகளும் 3வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தனர். இதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்க இருக்கிறார். இருவேறு வகையான தீர்புகளில் எது சரியானது என்பதை அவை இன்று முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.