விவசாயத்திற்கான திட்டங்கள்
விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஆண்டுக்கு 6ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும் பம்ப் செட் அமைக்க 50 % மானிய கடன் உதவி, விவசாயத்திற்கு குறைந்த வட்டியில் கடன் உதவி என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 25 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள்
இது தொடர்பாக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-26-உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி. பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025- 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026-27) வழங்கப்பட உள்ளது.
25 லட்சம் ரூபாய் மானியம்
எந்த இந்த மானிய உதவிகளை பெறும் வகையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், ஈரோடு, திருச்சி. அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. திருவாரூர், மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,
விண்ணப்பிக்க கடைசி தேதி.?
தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைத்து பயன்பெற தகுதியுடையவர் ஆவார்கள். எனவே. தகுதியுள்ள பயனாளிகள் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களை 12.06.2026-க்குள் அணுகி பயன்பெறுமாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
