தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் விஜய். கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்:


விஜய் கட்சி தொடங்கியதும் தமிழ்நாடு அரசியல் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியது. விஜய் கட்சித் தொடங்கி சில மாதங்கள் அமைதியாக இருந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், தன்னுடைய முதல் அரசியல் மாநாடு வரை அமைதி காத்தார். 


விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் அரசியல் மாநாட்டில் தன்னுடைய அரசியல் எதிரி தி.மு.க. என்றும், கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும் அறிவித்தார். மேலும் திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இரு கண்கள் என்று அறிவித்தார். அதன்பின்பு, சமூக வலைதளங்களில் நாள்தோறும் தவெக தொண்டர்களுக்கும், தி.மு.க. ஆதரவாளர்களுக்கும் மோதல் தீவிரமாக வெடித்து வருகிறது. நாம் தமிழர் மற்றும் சீமான் ஆதரவாளர்களும் விஜய்யை மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 


2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான்:


விஜய் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்றும், அவர் பொதுமக்களைச் சந்திக்க தயக்கம் காட்டி வருவதாகவும் விஜய்யை எதிர்ப்பவர்கள் தொடர்ந்து விஜய்யை விமர்சித்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகாலம் மட்டுமே உள்ள நிலையில், விஜய் அடுத்தாண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 


இதற்கான முன்னெடுப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட விஜய் முடிவு செய்துள்ளனர். இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய்யின் தமிழக சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகைள வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வரும் விஜய், படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கையை தீவிரப்படுத்த ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். அடுத்தாண்டு அவர் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையையும், அதற்கான நடவடிக்கைககளையும் அடுத்தடுத்து மேற்கொள்ள உள்ளார். 


தீவிர அரசியல்:


ஏற்கனவே, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனுக்கு ஆளுங்கட்சி தி.மு.க. அழுத்தம் தருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். விஜய்யின் இந்த குற்றச்சாட்டிற்கு திருமாவளவனே மறுப்புத் தெரிவித்திருந்தார். ஆனாலும், விஜய்யின் குற்றச்சாட்டு பெரும் பேசுபொருளாக மாறியது. 


2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களமிறங்கப்போகும் விஜய், தி.மு.க. எனும் மிகப்பெரிய கட்சியையும் அவர்களின் கூட்டணியையும் வீழ்த்த வேண்டும் என்றால் 2025ம் ஆண்டு முழுவதும் அரசியலுக்காக செலவிட வேண்டும் என்பது அவசியம் ஆகும். தனது கட்சியின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா முதல் விஜய்யை தீவிர அரசியலில் எதிர்பார்க்கலாம் என்று அவரது கட்சியினர் உறுதிபட கூறுகின்றனர்.