அரியலூர் மாவட்டத்தில் இருந்து குவைத் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற 20 தமிழர்கள், ஊதியம் வழங்கப்படாமல் ஏமாற்றப்படுவதால், அரசு அவர்களை உடனே மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.  


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 இளைஞர்கள் கடந்த ஓராண்டுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலமாக  குவைத் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தூய்மைப் பணிக்குச் சென்றனர். அதற்காக  சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்திற்கு ரூ.1.05 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். குவைத் நிறுவனத்தில் அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 (75 குவைத் தினார்) வீதம் இரு ஆண்டுகளுக்கு வேலை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால்,  ஓராண்டு பணி முடிந்த நிலையில், வேலைவாய்ப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டுமானால்  ரூ.1.25 லட்சம் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று குவைத் நிறுவனம் கட்டாயப்படுத்தி உள்ளது.


பணத்தை அவர்களால் தர முடியாத நிலையில், குவைத் நிறுவனம் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டது. வேலையில் இருந்தும் நீக்கி உள்ளது. இந்த நிலையில், செய்வதறியாமல் திண்டாடிய 20 தமிழ் இளைஞர்களும், குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம், தொழிலாளர் நலத்துறை அலுவலகம், காவல்நிலையம் ஆகியவற்றில் புகார் செய்தனர். எனினும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 


இந்த நிலையில், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக சம்பந்தப்பட்ட குவைத் நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களின் பாஸ்போர்ட், ஊதிய பாக்கி ஆகியவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் 20 தமிழ் இளைஞர்களையும் தமிழ்நாடு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. 


இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’குவைத்துக்கு வேலைக்கு சென்ற 20 இளைஞர்களும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த ஓராண்டாக பணி செய்து அவர்கள் ஈட்டிய ஊதியத்தைக் கொண்டு, குவைத் செல்வதற்காக வாங்கிய கடனையும், அதற்கான வட்டியையுமே கட்ட முடியாத நிலையில், அவர்களால் குவைத் நிறுவனம் கேட்ட பணத்தைத் தர முடியவில்லை. அதனால், அவர்களை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம், அவர்களின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக் கொண்டது. அவர்களின் உடமைகள் அனைத்தையும் தூக்கி வீசிய நிறுவன அதிகாரிகள், அவர்கள் தங்குவதற்காக அளிக்கப்பட்டிருந்த இடத்தையும் மூடி  விட்டனர். அதனால், 20 இளைஞர்களும் கடந்த ஒரு மாதமாக தங்குவதற்கு இடம் இல்லாமலும், உண்ண உணவு கிடைக்காமலும் குவைத்தில் வாடுகின்றனர். அவர்களிடம் கடவுச்சீட்டும், பயணச்சீட்டுக்கு பணமும் இல்லாததால், சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் குவைத்தில் தவித்து வருகின்றனர்.


குவைத் நிறுவனத்தின் துரோகம் மற்றும் மோசடி குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திலும் கடந்த ஜூலை 23ஆம் நாள் அவர்கள் புகார் செய்துள்ளனர். ஆனால், அதன்பின் ஒரு மாதம் ஆகியும் இது வரை எந்த நடவடிக்கையையும் இந்தியத் தூதரகம் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்  இங்கு வேலை இல்லை என்பதற்காகத் தான் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு செல்கின்றனர்.


மாதம் ரூ.20000 ஊதியம் கிடைக்கும் வேலைக்கு தங்களின் குடும்பத்தினரை பிரிந்து பல்லாயிரம் கி.மீ தொலைவுக்கு அப்பால் பணிக்கு செல்கிறார்கள் என்றால், அவர்களின் பொருளாதார நிலையை புரிந்து கொள்ள முடியும். கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் செலவழித்து குவைத்துக்கு சென்ற அவர்கள் ஓராண்டில் ஈட்டிய மொத்த ஊதியமே ரூ.2,40,000 மட்டும் தான். அவர்களிடம்  கூடுதலாக ஓராண்டு பணி வழங்க ரூ.1.25 லட்சம் கேட்பது எந்த வகையிலும் நியாயமல்ல. அப்பாவி தமிழ் தொழிலாளர்களிடம் நிகழ்த்தப்படும் இந்த உழைப்புச் சுரண்டலை எந்த நாடும் அனுமதிக்கக் கூடாது’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.