காஞ்சிபுரம்: தாமல் ஏரியில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் சோகம்! 24 மணி நேரத்தில் 4 பேர் மரணம் - அதிர்ச்சி!
"காஞ்சிபுரம் தாமல் ஏரியில் சோகம் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு, 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"

"காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரியில் குளிக்கச் சென்ற, இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது."
காஞ்சிபுரம் தாமல் ஏரி - Dhamal Lake
காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக விளங்கும் நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி அபாயகரமான நிலையில் உள்ளன. இந்தச் சூழலில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி, ஆந்திரா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த மழையால் பொன்னை அணைக்கட்டில் இருந்து திருப்பி விடப்பட்ட தண்ணீரால் தனது முழு கொள்ளளவான 18 அடியை எட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உபரி நீர் கலங்கல்கள் வழியாக வெளியேறி வருகிறது.
ஏரி நிரம்பி காட்சி அளிப்பதால் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், நிரம்பி வழியும் நீர்நிலைகளின் அபாயத்தை உணராமல் சிலர் குளிப்பது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தாமல் ஏரியில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.
இருவர் நீரில் முழுகி உயிரிழப்பு
இந்நிலையில், இன்று மாலை 3 மணி அளவில் தாமல் கிராமத்தைச் சேர்ந்த தினமணி என்பவரின் மகன் பாலா (19) மற்றும் ஜெயவேலு என்பவரின் மகன் வெள்ளை மணவாளன் (28) ஆகிய இரு இளைஞர்களும் ஏரியில் குளிக்கச் சென்றபோது, ஆழமான பகுதியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் இருவரின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணி நேரத்தில் 4 உயிரிழப்புகள்
ஏற்கனவே, கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் குளிக்கச் சென்ற மேலும் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருந்த சோகமான நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கது. பாலாற்றில் குளிக்கச் சென்ற பூந்தமல்லியைச் சேர்ந்த சிவசங்கர் என்ற இளைஞரும், அதேபோன்று நத்தப்பேட்டை ஏரியில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்ற இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர்.
இதன் மூலம், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நீர்நிலைகளில் குளிக்கச் சென்ற 4 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது என காவல்துறையினர் மற்றும் நீர்வளத்துறையினர் தொடர்ந்து எச்சரித்து வந்த நிலையிலும் இந்தத் துயரச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.






















