நெல்லையில் ஐ.டி. ஊழியரான கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மகனை இழந்து தவிக்கும் கவினின் பெற்றோர் போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்த வலியுறுத்தி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கவினை கொலை செய்த சுர்ஜித் அளித்திருக்கும் வாக்குமூலம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. 

அவர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில், "எனது அக்காவும், கவின் செல்வ கணேஷும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாகப் படித்தனர். இருவரும் நட்புடன் பழகிவந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள். கவின் பட்டியலின பிரிவை சேர்ந்தவர் என்பதால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. அவரை அழைத்து பலமுறை எச்சரித்தேன். எனது அக்காவையும் கண்டித்தேன். ஆனால், எனது அக்கா வேலை பார்க்கும் பாளையங்கோட்டை தனியார் சித்த மருத்துவமனைக்கே சென்று கவின் பேசி வந்தது கோபத்தை அளித்தது. 

எனவே கடந்த 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எனது அக்காவை சந்திக்க பாளையங்கோட்டை வந்திருப்பதை தெரிந்துகொண்ட நான் அவரை பின்தொடர்ந்து சொன்று தனியாக அழைத்து அவரை எச்சரித்தேன். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது பெண்ணின் பெற்றோர் தான். அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை போலீசார் வழங்கிய போது அதனை வாங்க மறுத்த பெற்றோர் எங்களுக்கு நிதி வேண்டாம். நீதி தான் வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றனர். மேலும், கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.