மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு: ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா? அரசு விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!
மின்வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து 18 ஹார்டு டிஸ்குகளில் தரவுகள் திருட்டு: ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா? விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO) தலைமை அலுவலகத்தில், கணினிகளில் இருந்து மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 18 ஹார்டு டிஸ்க்குகள் (Hard Disks) திருடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தத் திருட்டுக்குப் பின்னால் ஊழல் ஆதாரங்களை அழிப்பதற்கான சதி இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளதால், தமிழக அரசு இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
18 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர்கள் தொடர்பான மிக முக்கிய ரகசிய ஆவணங்கள் அடங்கிய சுமார் 18 கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தமிழக அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியத்தின் உள்விவரங்கள் மற்றும் பாதுகாப்பு ஓட்டைகள் நன்கு தெரிந்த நபர்களின் திட்டமிட்ட சதித் திட்டமாகவே இந்தத் துணிகரத் திருட்டு பார்க்கப்படுகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்ற ஆர். நிர்மல்குமார், கடந்த மே 16-17 தேதிகளில் மின்வாரிய தலைமையகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கயில்.,
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கணினிகளில் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 18 ஹார்டி டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசுத்துறை அலுவலகத்திலிருந்து மிக முக்கியமான தரவுகள் திருடப்பட்டிருப்பதும், அதற்கு சாதகமான சூழல் நீண்டகாலமாக உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.
திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள், ஏற்கனவே நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பதால், மின்சார வாரியத்தில் ஏற்கனவே நடைபெற்ற ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக நடந்த சதியாக இருக்கக்கூடும் என்று ஐயங்கள் எழுந்துள்ளன.
மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக கூறப்படும் போதிலும், இதுவரை 8 ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனதாக மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் 18-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள் காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்தத் திருட்டு நடந்திருக்க முடியாது.
5 ஆண்டுகளாக வேலை செய்யாத சிசிடிவி (CCTV) கேமராக்கள்:
தமிழ்நாட்டின் மிக முக்கியமான 10 அரசு அலுவலகங்களை பட்டியலிட்டால் அதில் மின்சார வாரியத் தலைமை அலுவலகமும் கண்டிப்பாக இடம் பெறும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாகவே கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை என்றும், தரகர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் அதிக ஊழல் நடைபெறும் துறைகளில் மின் துறை மிகவும் முக்கியமானது. அதனால் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் இவ்வாறு செய்யப்பட்டதா? ஐந்தாண்டுகளுக்கு மேலாக கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















