தமிழ்நாடு முழுவதும் கடந்த 16 நாட்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

அதிகரிக்கும் வழக்குகள்

தமிழ்நாட்டில் வாகன விதிமுறைகள் அமலில் இருந்தாலும் நம்மில் பலரும் அதனை மதிப்பதில்லை. மிதவேகத்தில் செல்வது, சிக்னல்களை மதிப்பது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது, தலைக்கவசம் அணிய வேண்டும்,  சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டக்கூடாது, உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என பல விதிகள் அமலில் இருந்தாலும் அதனை பின்பற்றாததால் விபத்து, உயிரிழப்பு போன்றவையும் அசம்பாவிதங்களும் நிகழ்கிறது. 

காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாதது தொடங்கி பல பிரிவுகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத்தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள் பறிமுதலும் நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  அபராதத்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டும் இதுவரை குற்றங்கள் குறைந்தபாடில்லை. 

Continues below advertisement

ஜூனில் இதுவரை ரூ.3.13 கோடி வசூல்

சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற காலத்தில் வாகன சோதனைகள் பெரும்பாலும் பணம் பட்டுவாடா உள்ளிட்டவைகளை மையப்படுத்தி இருந்ததால் சாலை விதிகளை பின்பற்றாத தொடர்பாக சோதனை குறைந்திருந்தது. இதனால் மக்கள் விதிகளை பின்பற்றாமல் காற்றில் பறக்க விட்டனர். இந்நிலையில்  புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வாகன சோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஜூன் 1ம் தேதி முதல் 16ம் தேதி வரை மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக தமிழக காவல்துறை16,031 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் ரூ.3.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சுமார் 14 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி,  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 13,299 இருசக்கர வாகனங்கள் என கூறப்பட்டுள்ளது.  156 மூன்று சக்கர வாகனங்களும், 645 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வாகன சோதனை நடத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் 1500 காவலர்கள் பணியமர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

Also Read: Aadhav Arjuna: ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்.. நோட்டீஸ் அனுப்பி செக் வைத்த ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?

கடந்த வாரம் சென்னையில் போக்குவரத்து போலீசார் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க ஒரு தீவிர வாகன சோதனை நடத்தினர். அதில் 434 பேர் பிடிபட்ட நிலையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1.69 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.