ஒரு காதல் ஜோடி காப்பாத்துங்க என்று காவல்நிலையம் வந்தால் ஒன்று அது சாதி மறுப்பு திருமணமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மாற்றுமதம் திருமணமாக இருக்க வேண்டும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரே நாளில் 12 ஜோடி ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது. அனைவரும் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள் என்று கோரினர். 


நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை ஆவணி மாத முதல் சுபமுகூர்த்த தினம். இதனால் பல காதல் ஜோடிகள் நேற்று கைகோத்தன. ஆனால் பெற்றோர் உற்றார் உறவினர் எதிர்ப்புக்குப் பயந்து ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம், அந்தியூர் காவல் நிலையம், பவானி காவல் நிலையம் என மூன்று இடங்களிலும் பல்வேறு காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர். 
பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மட்டும் 7 தம்பதிகள் தஞ்சமடைந்தனர். அந்தியூர் காவல் நிலையத்தில் 3 தம்பதிகளும், பவானி காவல் நிலையத்தில் 2 காதல் தம்பதிகளும் தஞ்சம் புகுந்தனர். 


இதில் அனைத்து ஜோடிகளுமே திருமண வயதை எட்டியிருந்தனர். இதனால் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஜோடிகளின் பெற்றோரை வரவழைத்தனர். ஆனால், சொல்லிவைத்தார் போல் எந்த ஒரு மணப்பெண்ணின் வீட்டாரும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே வேளையில் மணமகன் வீட்டார் அனைவருமே ஏற்றுக்கொண்டனர். அனைவருமே மணமக்களை தத்தம் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.




திருமணப் பதிவு அவசியம்:


திருமணம் செய்துகொள்ளும் புதுமணத் தம்பதிகள், தங்களின் திருமணத்தைப் பதிவுசெய்துகொள்வது அவசியம்.  கடந்த 2009 -ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாயச் சட்டமாக்கப்பட்டது. திருமணம் முடிந்த 90 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்ய,  சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதுவும் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகமாக இருக்க வேண்டும்.


ஆன்லனிலும் பதிவு செய்யலாம்:


நேரடியாக செல்ல முடியாதவர்கள், திருமணப் பதிவுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமே செய்துகொள்ள முடியும். https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில் இதற்கான வசதி உள்ளது.


அங்கு, திருமணத்தைப் பதிவுசெய்ய கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும். அதன்பின், சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து  குறுஞ்செய்தி வரும். அதில் குறிப்பிட்டுள்ள நேரம், தேதியில் உரிய ஆவணங்களுடன் சென்று திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளலாம்.


திருமணத்தைப் பதிவு செய்ய நிச்சயமாக மூன்று நபர்கள் சாட்சிக் கையெழுத்திட வேண்டும். ஆனால், சாட்சிக் கையொப்பம் இடுபவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நண்பர்கள் என்ற பட்சத்தில் 18 வயதை பூர்த்தி செய்த மேஜராக இருப்பது மிகவும் அவசியம்.