தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 12 மணி நேர சட்டமசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளே இந்த சட்டமசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 9 தொழிற்சங்கங்கள் வரும் மே 12-ந் தேதி வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த சட்டமசோதாவை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், மே 12-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்த போராட்டத்தையும் தொழிற்சங்கங்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. இதோடு இன்று நடைபெற இருந்த போராட்டம் மற்றும் நாளை நடைபெறவிருந்த தொழிற்சாலைகளில் உணவு புறக்கணிப்பு போராட்டமும் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக அரசின் புதிய சட்ட திருத்தம்:


தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா, கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் திமுக அரசால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்தன. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


தொழிற்சங்கங்கள் கருத்து:


அதில், 12 மணி  நேர  வேலை சட்ட மசோதா தொழிலாளர் நலனை பாதிக்கும்  என அண்ணா தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டமசோதாவை எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது, இந்த சட்ட திருத்தத்தில் தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தொழிலாளர்கள்  விரும்பினால் மட்டுமே வேலை பார்க்கலாம் என்ற அரசு கூறும் விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல என சிஐடியு சார்பில் தெரிவிக்கப்பட்டது. வேலை நேரத்தை குறைக்க வேண்டிய காலம், குறைக்க வேண்டிய தருணம் இது. எந்த லாபம் வரும் என்றாலும்,  தொழிலாளர் நலனே முக்கியம். எந்த விளக்கமும் தேவையில்லை. 12 மணி நேர வேலை சட்டத்தை முற்றாக திரும்பப் பெற வேண்டும். 8 மணி  நேர சட்டம் இருக்கும் சூழலிலேயே  12 மணி நேர வேலை  வாங்கும் பல நிறுவனங்கள் இருக்கின்றன என, பிற தொழிற்சங்கங்களும் இந்த சட்ட சோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.


மசோதா நிறுத்திவைப்பு:


தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், “2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)"- என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது” என அறிவித்தார். அதையேற்று தொழிற்சங்கங்கள் தற்போது வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.