கொரோனா சிகிச்சைக்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில், நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதி வழங்கினார்கள்.


கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழிழ்நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 10 லட்சம் ரூபாய் மேல் வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும், ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக நிதியை செலுத்தலாம் என்றும் கூறினார். மேலும், நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறினார். இதனைத் தொடர்ந்து பலரும் முதலைமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.


 


இந்நிலையில், நடிகர் சிவகுமார் அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினர். 


இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சிவகுமார், “எங்களால் முடிந்த சிறு
உதவியாக ஒரு கோடி ரூபாய் அளித்திருக்கிறோம். தமிழ்நாட்டில் திராவிட அரசியல் நீடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உடனடியாக செய்ய வேண்டியது,  தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கு வேலை கொடுத்தால் தமிழ் காப்பாற்றப்படும்” என்று கூறினார்.