ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகளை வைத்துள்ள நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று மனு அளித்தனர். நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி காவல் துறையிடம் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் திருவாரூர் கீழ வீதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் விளமல் வழியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்தினர்.









 

அதன்பின்னர் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்தியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் உடனடியாக அவற்றை நீக்க வேண்டும் எனவும், நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சிவசுப்ரமணியன் கூறியதாவது,ம் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் விதமாக பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளது, உடனடியாக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் தமிழ்நாட்டில் ஒரு திரையரங்குகளில் கூட நடிகர் சூர்யா படம் வெளியிட முடியாது இந்த விஷயத்தில் கட்சிகள் பாகுபாடின்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள வன்னியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளோம். சூர்யா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் எங்களுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.










 

ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜெய்பீம் படத்திற்கு எதிராகவும் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் நடிகர் சூர்யாவிற்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னியர் சங்க வடக்கு மாவட்ட செயலாளர் பாலு, தெற்கு மாவட்ட செயலாளர் சிவசங்கரன், மாவட்ட தலைவர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ஐயப்பன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சிவா, தெற்கு மாவட்ட துணை செயலாளர் சேகர், ஒருங்கிணைந்த அமைப்பு செயலாளர் குமார், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.