சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45 வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் 45 வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழாவினை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


 


இக்கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை, அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் குறித்து பூக்களால் ஆன பேருந்து, மீண்டும் மஞ்சப்பை திட்டம் உள்ளிட்டவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளாது. மேலும், அனைத்துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணி விளக்க முகாம்களை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தனர்.



பின்னர் விழா மேடையில் உரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், விரைவில் சுற்றுலா தளமான ஏற்காட்டில் 50 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அதிலும் குறிப்பாக ஏற்காடு மலைப்பாதை மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் கழிப்பறை கட்டப்படும். ஏற்காடு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக புதிதாக 4 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படும் என்று கூறினார். மேலும், Eco- tourism மூலம் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கேரவன் சேவை தொடங்கப்பட உள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஒரு நாள் முழுவதும் ஏற்காட்டில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். இதுமட்டுமின்றி ஏற்காடு ஏரியில் படகு உணவகம் அமைக்கப்படும். இவை அனைத்தும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.


 


இன்று தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ள கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியில் நாய் கண்காட்சி, பட்டிமன்றம், கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, கோலப் போட்டி, படகுப் போட்டிகள், சர்வதேச திரைப்படங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள், வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள், கால் பந்து, கைப் பந்து, கிரிக்கெட், கபடி, கயறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.