சிட்டுக் குருவிகள் தினத்தையொட்டி தருமபுரியில்  சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் நோக்கில், மரப் பலகையில் கூண்டு செய்து மரத்தில் கட்டி உணவு, தண்ணீர் வைக்கும் கல்லூரி மாணவர்கள்.

 

ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் தேதி அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் சிட்டுக் குருவிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தருமபுரியில் மருதம் நெல்லி கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை சார்பில், சிட்டுக் குருவிகளை மீட்கும் நோக்கில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சிட்டுக்குருவி வாழ்வியல் குறித்து கருத்தரங்கு மருதம் நெல்லி கோவிந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், முன்னாள் எம்பி டாக்டர் ஆர்.செந்தில் கலந்து கொண்டு, சிட்டுக் குருவிகளின் வாழ்வியல் முறை, வாழ்விடம், அழிவதற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைத்தினர். மேலும் சிட்டுக் குருவிகளை பாதுகாக்கும் முயற்சியில் மாணவர்களே மரத்தால் தயாரிக்கப்பட்ட கூடுகளை  மரத்தில் கட்டி அதில் உணவு தண்ணீரை வைத்தனர்.



 

மேலும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் மாணவர்கள் தினமும் இந்த சிட்டுக் குருவிகளை பராமரித்து தண்ணீர் மற்றும் உணவு வைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் சிட்டுக் குருவிகள் வந்து செல்கின்ற இடங்களை கண்டறிந்து வீடு, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றிற்கும் கூடுகளை வழங்க நூற்றுக்கும் மேற்பட்ட கூடுகளை கல்லூரி மாணவர்கள் தயார் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ந.மகேந்திரன், அரசு பள்ளி தலைமையாசிரியர் மா.பழனி, பறவை ஆர்வலர் ப.லோகநாதன், பசுமை சங்கர்,  பெரியசாமி, வை.விவேகானந்தன் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.