சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை, குகை, லைன்மேடு, பனங்காடு, சிவதாபுரம், மணியனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் சேலம் வெள்ளி கொலுசுக்கு தனி மதிப்பு உண்டு. மற்ற இடங்களில் கொலுசு தயாரிக்க நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சேலத்தில் பெரும்பாலான இடங்களில் இப்போதும் கைகளில் கொலுசு செய்வது தான் காரணம். ஒவ்வொரு மாதமும், சராசரியாக 50 டன் அளவுக்கு கொலுசு உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் இலங்கை, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றது.



உலக அளவில் வெள்ளி விலை கொரோனாவிற்கு பிறகு உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மத்திய அரசின் ஆபரண வரி உள்ளிட்ட காரணங்களால் வெள்ளி வியாபாரம் மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இதனால் கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தால் உள்ளனர். கொரோனாவிற்கு பிறகு வெள்ளி கொலுசு செய்து வந்த 30 சதவிகிதத்தினர் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் கொலுசு தயாரிக்கும் பணி பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி, உற்பத்தியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளி விலை உயர்வால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய வெள்ளி கொலுசு மீதான 4 சதவீத ஆபரண வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என்பது வெள்ளி கொலுசு தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கு முந்தைய கால கட்டத்திற்கான அரசின் செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார். தேர்தலை எதிர்நோக்கி பட்ஜெட்டில் முக்கியமான சலுகைகள் இடம்பெறலாம் என்பதால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தின் பிரதான தொழிலான வெள்ளி கொலுசு உற்பத்தி தொழிளர்கள், மத்திய பட்ஜெட்டில் ஆபரண வரி குறைப்பு அல்லது வரி விலக்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



இதுகுறித்து வெள்ளி கொலுசு தயாரிப்பாளர்கள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பணியில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் பரம்பரை பரம்பரையாக வெள்ளி கொலுசுகள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். பாரம்பரிய கைத் தொழிலான இதற்கு வரி எதுவும் இல்லாமல் இருந்தது. ஜி.எஸ்.டி வரி போட்ட பின்னால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொழில் செய்து வந்த பலர் கட்டுமான தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காலம் காலமாக அனைத்து சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகை நாட்களில் வெள்ளி கொலுசு அணிவது ஒரு சம்பிரதாயமாக உள்ள காரணத்தால் இதற்கு வரி விலக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். பழைய வெள்ளிக்கும் வரி புதிய வெள்ளிக்கும் வரி என்ற இரண்டு ஜிஎஸ்டி வரிகளை எடுத்தால் தொழில் நன்றாக இருக்கும் என்று வெள்ளி கொலுசு தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.