சேலம் மாநாராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் இன்று சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் சுதந்திர தினத்தன்று சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாய் தேர்வு பெற்று தமிழக முதல்வரால் விருது பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த விருதுக்கான மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மக்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.



அப்போது குறிப்பிட்ட அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி இந்த விருதுக்கு தற்போதைய மாமன்றம் மட்டும் காரணம் அல்ல கடந்த  அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களும் திட்ட பணிகளும் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட அடிப்படை வசதிகள் தான் காரணம் என தெரிவித்தார். அதனால் இந்த விருதுக்கு அதிமுகவுக்கும் பங்கு உண்டு என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போதைய மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் முயற்சியால் மேற்கொண்ட மக்கள் நல பணிகளால் தான் மாநகராட்சி வளர்ச்சிக்கு சிறந்த விருது கிடைத்தது என திமுகவினரும், கடந்த அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் தான் இந்த விருது கிடைத்தது அந்த விருது தங்களுக்கும் பங்கு உண்டு என்று அதிமுகவுடன் மாறி மாறி பேசியதால் இரு தரபினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதிமுக கவுன்சிலர்கள் சேலம் மாநகராட்சி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பேசினார். இதனை ஏற்க மறுத்த திமுக கவுன்சிலர்கள் கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், சேலம் மாநகராட்சி வளர்ச்சிக்கு அதிமுகவினர் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினர். இதனால் மன்ற கூட்டத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியது. 



இதனிடைய வார்டு பிரச்னையை பேச வந்த விசிக மாமன்ற உறுப்பினர் இமயவர்மன், பொது பிரச்சனை பேச வாய்ப்புக் கொடுக்க வேண்டும்  மாறி மாறி யார் சாதனையாளர்கள் என்ற பேச்சை விட்டு பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரி மேயர் இருக்கையின் முன்பு அமர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தனது கோரிக்கையை முன் வைத்ததால் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியது.


இதனையடுத்து திமுக மாமன்ற உறுப்பினர் சிலர் தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினரை  சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இதனால் சலசலப்பு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து ஆளுங்கட்சி கட்சி தலைவர் ஜெயக்குமார் மாநகராட்சிக்கு கிடைத்த விருது யார் காரணம் என்ற விவாதித்தை ஏற்க முடியாது. இது முற்றிலும் தற்போதைய மாவட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் மாமன்ற கூட்டத்தில் ஆரோக்கியமான வாதத்தை முன் வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதனையடுத்து மன்ற கூட்டம் அமைதியானது. இதனையடுத்து மாமன்ற கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பேசத் தொடங்கினர். பின்னர் அவசர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிவடைந்தது.