சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் பகுதியில் புதியதாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியில் உள்ளூர் மக்கள் பயன்பாட்டிற்காக பாதை அமைக்க திட்டமிட்டுள்ளனர். மற்றொரு பகுதியில் நெடுஞ்சாலைக்கு இரு புறமும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது. அந்த பகுதியில் உள்ள அண்ணாநகர், தில்லை நகர், அமராவதி நகர், சின்ன மோட்டூர், ஊத்து கிணறு, கிழாக்காடு உள்ளிட்ட பகுதி மக்கள் ஒருபுறம் இருந்து மற்றொரு புரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக மேம்பாலத்தின் மற்றொரு புறமும் பாதை அமைக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் நான்கு முறை அதிகாரிகளை சந்தித்து மக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலத்தின் குறுக்கே பாதை அமைத்து தர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் மேம்பாலத்தின் குறுக்கே பாதை அமைக்காமல் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அருளுடன் குரங்குச்சாவடி பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அலுவலகத்தை பூட்ட அருள் கையில் பூட்டு சங்கிலி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கை ஏற்காத அரசு அலுவலகம், அதிகாரிகள் எதற்கு என சட்டப்பேரவை உறுப்பினர் அருள் கேள்வி எழுப்பினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தின் குறுக்கே இரண்டாவது பாதை அமைப்பது தொடர்பாக திட்டம் வகுத்து வரைபடத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர். மாமாங்கம் பகுதி மக்களின் கோரிக்கையை துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இயன்றவரை பாதை அமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மீண்டும் மனு அளித்த சட்டப்பேரவை உறுப்பினர் அருள் தான் கொண்டு வந்த பூட்டையும் சங்கிலியையும் அவரிடமே கொடுத்து விட்டு சென்றார்.


தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் குறுக்கே இரண்டாவது பாதை அமைத்து தரவில்லை என்றால் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.