தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி மற்றும் 490 பேரூராட்சி என அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் பழனி குமார் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் 699 கவுன்சிலர்கள் பதவிக்கு வரும் 19 ஆம் தேதி 1,519 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சியில் 50 சதவீத தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் சேலம் மாநகராட்சி பகுதிகளில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி மண்டலம் உட்பட்ட பகுதியில் 14 வார்டுகள் உள்ளடக்கியது.


இந்த வார்டுகள் பெரும்பாலும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று அஸ்தம்பட்டி மண்டல அலுவலக வளாகம் பெண் வேட்பாளர்கள் நிறைந்து காணப்பட்டது. திமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு முக்கிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சை பெண் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  இதனிடையே சேலம் மாநகராட்சி 18 வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் ராதிகா தனது ஆதரவாளர்களுடன் சூரமங்கலம் மண்டல அலுவலம் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் ஒரே திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.



இதே போன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் சேலம் மாநகராட்சி 25 ஆவது வார்டில் போட்டியிடும் கல்லூரி மாணவி ஜனனி சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளில் நேற்று வரை மொத்தம் 402 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று வேட்பாளர்களின் எண்ணிக்கை 500 ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு நகராட்சிகளில் 165 வார்டுகளில் நேற்று வரை மொத்தம் 467 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 31 பேரூராட்சிகள் 474 வார்டுகள் உள்ளன இதில் சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று வரை மொத்தம் 1,404 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.