தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் அருகே ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் துக்க நிகழ்ச்சிக்காக பிக்கப் வாகனத்தில் பெட்டமுகிலாலம் மலை பகுதிக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பினர். அப்பொழுது பெட்டமுகிலாலம் செல்லும் மலைப்பாதையில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த, பிக்கப் வாகனம் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்ததிற்குள்ளானது. இந்தவிபத்தில் பிக்கப் வாகனத்தின் பின்னால் நின்றிருந்த தீபா (35), தங்கம்மாள் (55) ஆகிய இரண்டு பெண்கள் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை, அருகே இருந்த பொது மக்கள் மீட்டு 108 ஆம்புலன் மற்றும் அந்த வழியாக வந்த வாகனங்களின் உதவியுடன் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும் ஒரு சிலர் முதல் உதவிக்கு பின், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாரண்டஹள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பிக்கப் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் சரவணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து துக்க நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில், இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையறிந்த முன்னாள் அமைச்சர், பாலக்கோடு சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் விபத்தில் படுகாயம் அடைந்து, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் படுகாயமடைந்த ஒரு சிலர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களின் உடல் நிலை மற்றும் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கவும் மருத்துவர்களுக்கு கே.பி.அன்பழகன் அறிவுறுத்தினார். அப்பொழுது பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ ஏ.கோவிந்தசாமி, அரூர் சட்ட மன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.